24 வருட நீண்ட காத்திருப்பு.. ரோல் மாடல் விக்ரமை சந்தித்த காந்தாரா நாயகன் நெகிழ்ச்சி!

 
Vikram - Rishab Shetty

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிகர் விக்ரமை நேரில் சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தங்கலான் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் சுதந்திரத்திற்கு முன் மக்கள் சந்தித்த பிரச்சனைகளை மையமாக கொண்டு தங்கலான் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படத்திற்கு அதிகமான உடல் உழைப்பை செலுத்தி தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பாராட்டை பெறும் விக்ரம், தங்கலான் படத்திலும் கதாபாத்திரத்திற்காக உடலை வருத்திக் கொண்டு நடித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் தங்கலான் படம் வெளியாகவுள்ள நிலையில், ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது.

thangalaan

சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், நேற்று பெங்களூருவில் தங்கலான் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, நடிகர் விக்ரம், இயக்குநர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோரை நேரில் சந்தித்து தங்கலான் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து ரிஷப் ஷெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது திரைப் பயணத்தில், நடிகர் விக்ரம் எப்போதும் ஒரு உத்வேகமாக இருந்துள்ளார். 24 வருடம் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு, எனது ரோல் மாடல் நடிகர் விக்ரமை சந்தித்ததால் இந்த பூமியில் மிகப்பெரும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.


என்னை போன்ற நடிகர்களுக்கு உத்வேகமாக இருக்கும் நடிகர் விக்ரமுக்கு நன்றி, தங்கலான் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார். ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடத்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ இந்திய அளவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் 2ஆம் பாகத்தில் நடித்து வருகிறார்.

From around the web