16 வயது சிறுவனுக்கு உருட்டுக்கட்டையால் அடி.. பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு
சிறுவனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க சென்னை வளசரவாக்கம் தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.
சென்னை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (20). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மதுரவாயலைச் சேர்ந்த 16 வயது ஐடிஐ படிக்கும் சிறுவனுடன் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள காலபந்து பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு இருவரும் உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கிருபாகரன், 16 வயசு சிறுவன் ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் மேற்கண்ட இருவரையும் அந்த 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து காயமடைந்த கிருபாகரனும், 16 வயது சிறுவனும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து கிருபாகரன் உள்பட இருவரும் போலீசில் புகார் அளித்தனர். அப்போது விசாரணையில் தாக்குதல் நடத்திய 6 பேரில் இருவர் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரஃபி மனோ மற்றும் ரிதீஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து மனோவின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவருடைய இரு மகன்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மனோவின் இரு மகன்களும் வீட்டில் இல்லை. அவர்களை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களுடைய நண்பர்களிடம் கேட்ட போதும் அவர்களுக்கு தெரியவில்லை. எனினும் புகாரின் பேரில் சம்பவ இடத்தில் இருவரை தாக்குதல் நடத்திய மனோ மகன்களின் நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மனோ மகன்களை தேடி வருகிறார்கள்.
இதனிடையே போலீஸார் கண் முன்னேயே உருட்டுக்கட்டையால் அந்த இருவரை மனோ மகன்கள் உள்ளிட்டோர் தாக்கிய வீடியோவும் வெளியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் கூறுகையில் மனோவின் மகன்களின் செல்போனை போலீசார் பறிக்கவில்லை. ஆனால் எங்களுடைய செல்போனை பறித்துவிட்டனர். மனோ வீட்டு வாசலில் இரு போலீசார் நின்றிருந்தனர். ஆனால் எங்கள் வீட்டு வாசலில் நிறைய போலீசார் நின்றிருக்கிறார்கள். போலீசார் மனோ வீட்டு வாசலில் நிற்பதை வைத்துதான் அவர்கள் மனோவின் மகன்கள் என தெரியவந்தது என தெரிவித்துள்ளனர்.