வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படம் உருவாக்கம்... இயக்குநர் மணிரத்னத்திற்கு எதிராக வழக்கு..!

 
Maniratnam - karthi

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குநர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் படைப்பை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அன்று இதன் முதல் பாகம் வெளியாகியது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தை எடுத்தபோதே, இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பும் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டு பாகங்களுமே சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்ததாகவும், அந்த தொகை முழுவதும் முதல் பாகத்திலேயே கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

PS1

இந்த நிலையில் வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குநர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிடக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய கதாப்பத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது சுய லாபத்திறாக வரலாற்றை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்றும் மனுவில் குற்றம்சாட்டி, வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Maniratnam-HC

வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கியும் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்து உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

From around the web