அதிர்ச்சி! பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

 
Aaroor Dass

தமிழ்  திரையுலகின் பழம்பெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 91.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என தமிழ் சினிமாவின் மறைந்த பல திரை ஜாம்பவான்களின் படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். 1954-ம் ஆண்டு வெளியான ‘நாட்டிய தாரா’ படத்தின் மூலம் சினிமாவில் வசனகர்த்தாவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘சத்தியவான் சாவித்திரி’ தெலுங்கு படத்திற்கு வசனம் எழுதினார். தமிழில் 1959-ம் ஆண்டு வெளியான ‘வாழ வைத்த தெய்வம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

எம்ஜிஆரின் தாய் சொல்லை தட்டாதே, அன்பே வா, தாயை காத்த தனயன், குடும்பத் தலைவன் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதி உள்ளார். சிவாஜியின் பாசமலர், புதிய பறவை, தெய்வ மகன், அன்னை இல்லம் உள்ளிட்ட எண்ணற்ற படங்களுக்கு இவர் வசனம் எழுதி உள்ளார். கடைசியாக 2014-ம் ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளியான ‘தெனாலிராமன்’ படத்திற்கு ஆருர்தாஸ் வசனம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

AaroorDass-MKS

திரைக்கதை, வசனம் எழுதி வந்த ஆரூர்தாஸ் ஜெமினி கணேசன் நடித்த ‘பெண் என்றால் பெண்’ என்கிற படத்தை இயக்கினார். ஆனால், அதன் பின்னர் ஆரூர்தாஸ் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை. பேபி என்பவரை மணந்த ஆரூர்தாஸுக்கு ரவிச்சந்தர் என்கிற மகனும், தாராதேவி, உஷாதேவி, ஆஷாதேவி ஆகிய மகள்களும் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு தான் திரைத்துறையில் இவரது சாதனையை கௌரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார். 

RIP

சென்னை திநகர் நாதமுனி தெருவில் மாதா கேஸலில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரூர்தாஸ் வயதுமூப்பு காரணமாக நேற்று மாலை காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேற்படி இன்று (நவ. 21) மதியம் 12 மணி வரை அவரது பூவுடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் என்றும், அதன் பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web