கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ - ஆங்கில மொழிபெயர்ப்பு துபாயில் மாநாட்டில் வெளியீடு!

 
Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நூல் ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டது.

பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவர் கவிதை, நாவல் என மொத்தம் 37 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது கைவண்ணத்தில் வெளியான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’ நாவல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Vairamuthu

இந்த நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலை 23 மொழிகளில் சாகித்ய அகாடமி நிறுவனம் மொழிபெயர்த்து வருகிறது. இந்தி, உருது, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்துள்ளார்.

துபாயில் உள்ள அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெற்ற ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ என்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெற்ற இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32 நாடுகளின் பிரதிநிதிகள் அதனை பெற்றுக்கொண்டனர்.


இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “துபாயில் இருக்கிறேன். உலகப் புகழ்மிக்க அட்லாண்டிஸ் ஓட்டல் ரைஸ் சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாடு. கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ வெளியிடப்பட்டது; 32 நாட்டார் பெற்றுக்கொண்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

From around the web