ஹாலிவுட்ல படம் பண்ணனும்னா... வாங்க பேசலாம்... ராஜமெளலிக்கு ஜேம்ஸ் கேமரூன் அழைப்பு!!

 
RajaMouli-Jamescameroon

ஹாலிவுட்டில் படம் இயக்கவேண்டும் என்றால் வாங்க பேசலாம் என்று ராஜமெளலிக்கு, அவதார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.

நான் ஈ, மகதீரா, பாகுபலி ஆகிய படங்களை இயக்கிய ராஜமௌலியின் அடுத்த படைப்பான ‘ஆர்ஆர்ஆர்’ படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமாராம் பீம் ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஜூவாக ராம் சரணும், பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடித்தனர். இவர்களுடன் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த இந்த படம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று 1,200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

இந்த படத்தில் இடம் பெற்று வரவேற்பை பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருதையும் வென்றது. நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணி நிகழ்ச்சி மேடையில் ஏறி கோல்டன் குளோப் விருதை பெற்றுக்கொண்டார்.

Keeravani

இதனிடையே, கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் ஹாலிவுட் திரைத்துறையின் முன்னணி டைரக்டரும் அவதார் திரைப்பட டைரக்டருமான ஜேம்ஸ் கேமரூனை ராஜமவுலி சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு டைரக்டர்களும் பல்வேறு ருசிகர தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.

டைட்டானிக், அவதார் படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ராஜமெளலி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆர்.ஆர்.ஆர் படத்தை அவர் எப்படியெல்லாம் ரசித்தார் என்பதை ராஜமௌலிக்கு அவர் உணர்ச்சியுடன் விளக்கி, இப்படி உணர்ச்சியாக படத்தை எடுத்ததற்காக ராஜமௌலியை அவர் பாராட்டினார். மேலும் ஆர்.ஆர்.ஆர்.திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் ஒரு குழந்தையைப் போல் பார்த்து ரசித்ததாக அவரது மனைவி சூசி கேமரூன் கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய ஜேம்ஸ் கேமரூன், ஆர்.ஆர்.ஆர்.படத்தில் இசையை நீங்கள் வித்தியாசமாக கையாண்டிருப்பதாக ராஜமெளலிக்கு பாராட்டு தெரிவித்ததோடு, நடித்தும் காட்டினார். மேலும் அந்த படத்தில் இசையை மிகவும் அற்புதமாக கையாண்டதற்காக படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஜேம்ஸ் கேமரூன் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டில் படம் இயக்கவேண்டும் என்றால் நாம் பேசலாம் எனவும் ராஜமெளலியிடம் ஜேம்ஸ் கேமரூன் கூறினார். சினிமா ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

From around the web