ரன்பீர் கபூர் பட ஷூட்டிங் ஸ்பாடில் தீ விபத்து.. இளைஞர் ஒருவர் பலி!!

 
Mumbai

நடிகர் ரன்பீர் கபூர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் போடப்பட்ட பிரம்மாண்ட செட் தீயில் கருகி நாசமாகியது.

2007-ம் ஆண்டு வெளிவந்த சாவரியா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ரன்பீர் கபூர். இப்படத்திற்காக அவர் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். அதனைத் தொடர்ந்து பச்னா ஏ ஹசீனோ, லக் பை சான்ஸ், வேக் அப் சித் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது லவ் ரஞ்சன் இயக்கி வரும் புது படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் போனி கபூர் நடிகராக அறிமுகமாக உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், நேற்று திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

Mumbai

இதையடுத்து தீ மளமளவென பரவியதில் அந்த செட் முழுவதும் எரிந்து நாசமாகியது. இதனால், கரும்புகை வான்வரை பரவியது. காற்றில் பரவிய புகையால் அந்த பகுதியே புகை மண்டலம் போல் காட்சியளித்தது. இதுபற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தன.

இதையடுத்து பத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தன. இரவு 10.30 மணிக்கு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் செட் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் படக்குழுவுக்கு ரூ.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதுபற்றி கூப்பர் மருத்துவமனை மருத்துவர் சதாபுலே கூறும் போது, ``தீ விபத்தில் சிக்கி, சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்'' என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரன்பீர் கபூரும் ஷ்ரத்தா கபூர் ஸ்பெயினில் நடந்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு சமீபத்தில்தான் மும்பை திரும்பினர். அவர்கள் படிப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த செட்டில் பிரம்மாண்ட பாடல் காட்சி படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web