நடிகர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடாதீங்க - நடிகர் சத்யராஜ் காட்டம்

 
sathiyaraj

ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடாதீங்க என நடிகர் சத்யராஜ் காட்டம் கூறினார்.

தற்கொலை அறவே கூடாது என்பதை வலியுறுத்தி செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, மனதின் மையம் அறக்கட்டளை சார்பில் தற்கொலை தடுப்பு மையம் இன்று ஈரோட்டில் தொடங்கப்பட்டது. அறக்கட்டளை தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார்.

sathiyaraj

நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய சத்யராஜ் நீட் தேர்வு பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், “நீட் தேர்வு ரத்து செய்யவேண்டும் என்பதற்கு முதல் தலைமுறை பட்டதாரி உருவாகுவது முக்கியம். அதற்கு தடையாக எது இருந்தாலும் நீக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்று கூறினார்.

தொடர்ந்து சத்யராஜிடம், தொடர்ச்சியான தற்கொலை செய்திகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு சினிமா நடிகருக்கு ஐன்ஸ்டீன் அளவிற்கு தெரியும் என நினைத்துக் கொள்வது இச்சமூகத்தின் மிகப்பெரிய தவறு. நடிகர்களை ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்? ஸ்டார்ட், கேமரா, ஆக்சன் என்றால் நடிப்போம் நாங்கள். ஆகவே, எங்களுக்கு சோறு மட்டும் போடுங்கள்; தலையில் வைத்து கொண்டாடுவது வேண்டாம். இது எனக்கு ஊடங்களின் மீதுள்ள வருத்தம். நாங்கள் யாரும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்லது வேறு யாரும் அறிஞர்களோ இல்லை. அதை புரிந்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

sathiyaraj

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “எனக்கு நான் தான் ராஜா. இந்த நிகழ்ச்சியை திசை திருப்பி வேறெங்கோ கொண்டு செல்கிறீர்கள். செய்தியாளர்களுக்கு சமூக அக்கறை இல்லை” என காட்டமாக பதில் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் என்னிடம் வாயை பிடுங்க முடியாது என காரசாரமாக பேசினார். இது அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

From around the web