கட்சிப் பாசமா? அல்லது அண்ணனை பழி தீர்த்தாரா கங்கை அமரன்?

 
Ilayaraaja

தமிழ் திரையுலகை கால் நூற்றாண்டுக்கும் மேலாக தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்திருந்தது மட்டுமல்லாமல், இந்திப் பாடல்களின் ஆதிக்கத்தை தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டு வந்தவர் இசைஞானி இளையராஜா. பாவலர் பிரதர்ஸ் என்று வாய்ப்புகள் தேடிய அண்ணன் தம்பிகள் பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் என மூவருக்கும் அன்னக்கிளி படம் மூலம் புதிய அத்தியாயம் தொடங்கியது. இளையராஜா என்ற பெயருடன் அறிமுகப்படுத்தினார் பஞ்சு அருணாச்சலம்.

பாஸ்கர் திரைப்படத் தயாரிப்பாளராகவும், கங்கை அமரன் பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் எனவும் புகழ் பெற்றனர். கங்கை அமரன் இயக்கிய கோழி கூவுது முதல் கரகாட்டக்காரன், கும்பக்கரை தங்கையா, சின்னவர் என அனைத்துப் படங்களுக்குமே இசையமைத்தவர் இளையராஜா தான். அதே போல் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அனைத்துப் படங்களும் இளையராஜாவின் இசையில் தான் வெளிவந்தது. பாஸ்கர் மரணம் தம்பிகள் இருவரையும் பாதித்தது. அதன் பிறகும் இளையராஜா, கங்கை அமரனின் பாசப்பிணைப்பு நீடித்தே வந்தது.

எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பினால், சொந்தமாகா ராஜா ஆடியோ என்ற நிறுவனத்தை இருவரும் நடத்தி வந்தனர். அந்த நிறுவனம் தொடர்பாகத் தான் அண்ணன் தம்பி இருவருக்கும் முதலில் மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகரிக்கத் தொடங்கியது. பேச்சு வார்த்தை குறைந்து போய் ஒரு கட்டத்தில் இருவரும் தொடர்பு இல்லாமலேயே போய்விட்டனர். இளையராஜா குறித்து ஊடகங்களில் விமர்சிக்கவும் செய்தார் கங்கை அமரன்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் அமெரிக்கப் பயணத்தின் போது காப்பிரைட் தொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், இளையராஜா தரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் எஸ்.பி,பி.க்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை வெளிப்படையாகக் கண்டித்தார் கங்கை அமரன். ஆனாலும் இளையராஜாவின் இளையமகன் யுவன் சங்கர் ராஜா தான் கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து வந்தார்.

வாரிசுகள் உறவைப் பேணி வந்தாலும், அண்ணன் தம்பிகள் இருவரும் பாராமுகமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இளையராஜாவின் வீட்டிற்குச் சென்று அண்ணனைச் சந்தித்தார் தம்பி கங்கை அமரன். இருவருடைய சந்திப்பு குடும்பத்தினரை மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகம் தாண்டி, தமிழர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது. புகைப்படங்கள் சமூகத் தளத்தில் வைரலானது.

”நீண்ட நாட்களுக்குப் பிறகு என் அண்ணனை சந்தித்தேன். என்னைப் பற்றியும் என் உடல்நிலை பற்றியும் விசாரித்தார். சிறு வயதில் எப்படி இருப்பேன், என்னவெல்லாம் செய்தேன் என்பதைப் பற்றி ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தார். என்னுடைய மனைவி இறந்தது குறித்தும் கேட்டறிந்தார்,” கங்கை அமரன் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த சந்திப்பு நடந்து முடிந்த இரண்டு மாதத்தில் இளையராஜா,  பிரதமர் மோடி குறித்தான புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ளது தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியை அண்ணல் அம்பேத்கருடன் எப்படி ஒப்பீடு செய்யலாம் என்ற கேள்விகள் நாலாப்பக்கமும் எழுந்துள்ளது. தன்னுடைய கருத்துக்களை திரும்பப் பெற மாட்டேன் என்று கங்கை அமரன் மூலம் தெரிவித்துள்ளார் இளையராஜா.

பாஜக சார்பில் மேலவை எம்.பி. ஆக இளையராஜா தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற செய்திகளும் கசிந்துள்ளன. அப்படி ஒருவேளை எம்.பி.ஆக அறிவிக்கப்பட்டால் அதை ஏற்பாரா இளையராஜா என்ற கேள்விகளையும் சிலர் எழுப்பியுள்ளனர். தான் உண்டு தன் இசை உண்டு என்று இருந்தவரை தம்பி கங்கை அமரன் தான் இப்படி ஒரு சிக்கலுக்கு ஆளாக்கி விட்டுள்ளார் என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது. கங்கை அமரன் பாஜகவில் இணைந்து ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவும் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை ஆண்டு காலம் அண்ணனைப் பார்ப்பதை தவிர்த்து வந்த தம்பி கங்கை அமரன், கட்சியின் கட்டளையை நிறைவேற்றத்தான் அண்ணன் மீது திடீர் பாசமழை பொழிந்தாரா? அல்லது பழைய பகையை மனதில் வைத்து அண்ணனை சிக்கலில் மாட்டிவிட்டு பழி தீர்த்தாரா?  என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

From around the web