பிரபல பாலிவுட் நடிகைக்கு பெண் குழந்தை... குவியும் வாழ்த்துகள்!!

நடிகை ஆலியா பட், பெண் குழந்தை பிறந்துள்ளதை நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகையான ஆலியா பட், பிரபல இயக்குநர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸ்டான் ஆகியோரின் மகள் ஆவார். 1999-ல் வெளியான ‘சங்கர்ஷ்’ படத்தில் குழந்தையாக அறிமுகமான ஆலியா பட், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியின் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மும்பை, பாந்த்ராவில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. திருமணம் ஆன இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார் ஆலியா. அதன் பிறகு அவ்வப்போது தான் கர்ப்பிணியாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார் ஆலியா பட். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், எங்களது வாழ்க்கையின் முக்கியமான செய்தி இதுதான். எங்களது குழந்தை கைகளில். அழகான பெண் குழந்தை அவள். ஆசிர்வதிக்கப்பட்ட அன்பான பெற்றோராக மாறி இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.