மருத்துவமனையில் நடிகர் அப்பாஸ்.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
Abbas

நடிகர் அப்பாஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

1996-ம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றதை அடுத்து, நடிகர் அப்பாஸுக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. விஐபி, மின்னலே, பூச்சூடவா, பூவேலி, படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், திருட்டுப்பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்துள்ள அப்பாஸ், இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அப்பாஸுக்கு திருட்டு பயலே படத்திற்கு பிறகு, வெளியான எந்த படமும் வெற்றி பெறாததால், பட வாய்ப்புகள் குறைந்ததால், கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

Abbas

அதன் பிறகும் தமிழில் 'ராமானுஜன்' என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர் இவர் திரைத்துறையை விட்டு விலகி வெளிநாடு சென்றார். அங்கே சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். தனது சமூக வலைதளங்கள் மூலம் தனது அன்றாட வாழ்வில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு ஒரு விபத்து நேர்ந்ததாகவும், அதனால் தனது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் 'வாக் ஸ்டிக்' வைத்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, "எனது அறுவை சிகிச்சைக்காக நாளை புறப்படுகிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டார். இதையடுத்து ரசிகர்கள் நண்பர்கள் பலரும் இவருக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிய வேண்டுமென கமெண்ட்ஸ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், தற்போது தனக்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்து நடிகர் அப்பாஸ் மீண்டும் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவமனையில் இருக்கும்போது கவலைகள் மிக மோசமானவையாக இருக்கும். ஆனால் நான், சில பயங்களை சமாளிக்க முயற்சிக்கிறேன். நான் என் மனதை மேம்படுத்த முயற்சிக்கிறேன். அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை கண்ட ரசிகர்கள் என்னாச்சு அப்பாஸுக்கு எனகேள்வி கேட்டு வருகின்றனர். அப்பாஸ், என்ன அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற எந்த விவரமும் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

From around the web