அத்துமீறிய சட்ட கல்லூரி மாணவர்.. தரமான பதிலடி கொடுத்த நடிகை அபர்ணா பாலமுரளி!

 
Aparna Balamurali

கேரளாவில் நடந்த பட புரமோஷன் விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017-ம் ஆண்டு வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அபர்ணா பாலமுரளி நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அதனை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் தட்டிச் சென்றார். இதையடுத்து தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது ‘தங்கம்’ என்ற மலையாள படம் தயாராகி உள்ளது.

இப்படம் வருகிற ஜனவரி 26-ம் தேதி வெளியாக உள்ளது. சஹீத் அராபத் இயக்கியுள்ள இப்படத்தில் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் படத்தை அறிமுகம் செய்து வைக்கும் விழா நடைபெற்று வருகிறது.

Aparna Balamurali

அந்த வகையில் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் படத்தின் அறிமுக விழா நேற்று நடந்தது. இதில் படத்தின் நாயகன் வினித் சீனிவாசனுடன் அபர்ணா பாலமுரளியும் பங்கேற்றார். விழா தொடங்கிய சிறிது நேரத்தில் அக்கல்லூரியைச் சார்ந்த மாணவர் ஒருவர், அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து வழங்கினார். அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிய அபர்ணா, மாணவருடன் கைகுலுக்கி கொண்டார்.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த மாணவர் அபர்ணாவின் தோள் மீது கையைப் போட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட அபர்ணா, அவர் கையிலிருந்து வேகமாக நழுவினார். ஆனாலும் விடாமல் அபர்ணாவை பிடித்து இழுக்கும் விதமாக மாணவர் தகாத முறையில் நடந்துகொண்டார். அருகில் இருந்த தயாரிப்பாளர், ஹீரோ வினித் ஆகியோர் சத்தம் போட்டு மாணவரை கட்டுப்படுத்தினர்.


இதற்கு பின் மைக் எடுத்து பேசிய அந்த மாணவர், தான் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை என்றும், அபர்ணாவின் தீவிர ரசிகன் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு நடந்துகொண்டதாகவும் விளக்கமளித்தார். அத்தோடு நில்லாமல் மீண்டும் அபர்ணாவிடம் கை கொடுக்க வந்தார். ஆனால் அபர்ணாவோ, கையைக் கொடுக்காமல் வேண்டாம் என சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்தார். ஆனாலும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மேடையிலேயே மன்னிப்பு கேட்டார். இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web