ஒரு நிமிஷத்தில் 6 லட்சம் காலி.. ரஜினி பட நடிகையிடம் டிஜிட்டல் மோசடி..!

 
Anjali Patil Anjali Patil

நடிகை அஞ்சலி பாட்டீலிடம், மர்ம கும்பல் நூதன முறையில் ரூ.6 லட்சம் மோசடி செய்துள்ள சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2011-ல் வெளியான ‘டெல்லியில் ஒரு நாள்’ படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலி பாட்டீல்.  சக்ரவியூ , நியூட்டன் மற்றும் இலங்கைத் திரைப்படமான ஒபா நதுவா ஒபா எக்கா ஆகியவற்றில் நடித்தன் மூலம் அவர் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 2018-ல் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் புயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

‘குதிரைவால்’ படத்திலும் நடித்துள்ள இவர் இந்தி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். மும்பை அந்தேரியில் வசித்து வரும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் போன் செய்தார்.

Anjali Patil

தங்களது பெயரில் வெளிநாட்டில் இருந்து வந்த பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகவும், அதை சுங்க துறையினர் கைப்பற்றிவிட்டதாகவும் கூறிய அந்த நபர், அதுதொடர்பாக மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுமாறும் கூறினார். பின்னர் சிறிது நேரத்திலேயே, ஸ்கைப் மூலமாக மற்றொரு நபர், நடிகை அஞ்சலி பாட்டீலை தொடர்பு கொண்டு, தன்னை மும்பை சைபர் கிரைம் போலீஸ் என கூறினார்.

போதைப்பொருள் பார்சல் பற்றி பேசியவர், தங்களது 3 வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாகவும் கூறி நடிகைக்கு அதிர்ச்சி கொடுத்ததுடன் அதுகுறித்து சரிபார்ப்பு பணி செய்து, பிரச்னையை முடித்து வைக்க ரூ. 96,525 கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறினார். அதை உண்மை என நம்பிய நடிகை அஞ்சலி பாட்டீல், பணத்தை ஆன்லைனில் அனுப்பினார்.

Scam

பின்னர் மீண்டும் நடிகைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், பண பரிவர்த்தனையில் வங்கி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும், அதுகுறித்து விசாரிக்க மேலும் ரூ. 4,83,291 செலுத்த வேண்டும் என கூற, அந்த பணத்தையும் நடிகை அனுப்பி வைத்தார். அதன் பின்னர் மர்ம நபரிடம் இருந்து எந்தவித அழைப்பும் வராததுடன் அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்துது. அப்போதுதான் நடிகை அஞ்சலி பாட்டீலுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

அதையடுத்து மோசடி கும்பலிடம் 6 லட்சத்தை பறிகொடுத்ததாக நடிகை அஞ்சலி பாட்டீல் மும்பை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நடிகையிடம் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர். பிரபலமான நடிகை ஒருவரிடம் மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web