16வது ஆசிய திரைப்பட விருதுகள்.. 6 பிரிவுகளில் பொன்னியின் செல்வன் பரிந்துரை!

 
PS1

16-வது ஆசிய திரைப்பட விருதுகளுக்கு பொன்னியின் செல்வன் முதல் பாகம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் படைப்பை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி இதன் முதல் பாகம் வெளியாகியது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2-ம் பாகம் வரும் 2023 ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PS1-RRR

இந்நிலையில், ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் 16-வது ஆசிய திரைப்பட விருதுகளில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆசிய பிலிம் விருதுகள் அகாடெமி, 16-வது ஆசிய திரைப்பட விருதுகளுக்கான செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று நடத்தியது. இதில் ஆசிய திரைப்பட விருதுகளின் போட்டிப்பிரிவில் பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை பரிந்துரைக் குழு அறிவித்தது. அதன்படி மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல்பாகம், சிறந்த படம், சிறந்த ஒரிஜினல் இசை (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த படத்தொகுப்பு (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்), சிறந்த கலை இயக்குனர் (தோட்டா தரணி), சிறந்த உடை அலங்காரம் (ஏகா லஹானி) உள்ளிட்ட 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் எஸ்.எஸ். ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (ஸ்ரீனிவாஸ் மோகன்), சிறந்த ஒலி (அஷ்வின் ராஜசேகர்) இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கடந்த வருடம் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தாலும், இந்த இரண்டு படங்கள் மட்டுமே நாமினேஷன் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. வருகிற மார்ச் 12-ம் தேதி ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் பேலஸ் மியூசியத்தில் இரவு 7.30 மணிக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

From around the web