10 வருட கால வேண்டுதல்.. திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய பிரபல நடிகை!

நடிகை முடி இல்லாத தலையுடன், மயிலிறகு ஏந்தியுள்ளவாறான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2002-ல் வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் காய்திரி ரகுராம். அதனைத் தொடர்ந்து ஸ்டைல், பரசுராம், விசில், விகடன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 2006-ல் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், தன்னை கொடுமை செய்வதாக கூறி 2010-ல் விவாகரத்து பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன்பின், அவருக்கு வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகக் கூறி கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகினார். இதற்கிடையில் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற அவர், அங்கு முடி காணிக்கை செலுத்தியுள்ளார். முடி இல்லாத தலையுடன், மயிலிறகு ஏந்தியுள்ளவாறான புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து காயத்ரி ரகுராம் கூறுகையில், “இது 10 ஆண்டு கால வேண்டுதல். என் வேண்டுதலை திருப்பதி ஏழுமலையான் நிறைவேற்றி தந்துள்ளார். அதற்காக என் முடியை காணிக்கை செலுத்தி விட்டேன். வேண்டுதலை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. தரிசனமும் நல்லபடியாக நடந்தது” என்றார். அந்த வேண்டுதல் என்னெவென்று கேட்டபோது, ‘சொந்த காரணங்களுக்கான வேண்டுதல். கொஞ்சம் பர்ஷனல்’ என்று பதிலளித்தார்.
காயத்ரி ரகுராம் விரைவில் புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றும் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.