ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா?
                                      பூவே பூச்சூடவா

 

அழகு என்ற சொல் பெண்ணுக்குப் பொருந்தி நிற்பதினால் பேரழகு பெறுகின்றது. பெண்ணவள் செய்யும் எந்தச் செயலும் அழகுணர்ச்சி நிறைந்ததாகவே இருக்கும். இயல்பான இனிமைத் தன்மை பெற்று, உள்ளம் முழுக்க அன்பைச் சுமந்து நிற்கும் பெண்ணின் ஆற்றல் அழகின் சுவையை அள்ளித்தரும். இதுதான் அழகு எனச் சொல்லித்தரும். எதையும் கலைநயத்தோடு நோக்கும் மூன்றாவது கண் பெண்ணின் தனிச்சிறப்பு. அழகியல் பார்வையோடு தன்னைச் சுற்றியுள்ள இடத்தைப் பொலிவுடன் வைத்துக் கொள்வதும், எதையும் திறம்பட, திருத்தமாகச் செய்யும் ஆற்றலுமே அதற்குச் சான்று. இயற்கையின் படைப்பில் வாழும் அதிசயம் பெண்.

ஆதிப்பெண் காடு, மலைகளில் சுற்றித் திரிந்தாள். செடி, கொடிகளைப் பற்றிப் பறந்தாள். அருவிகளில் புகுந்து, நீரோடைகளில் கலந்தாள். மலையும், மழையும் அவள் சொந்தம். காற்றைப் போல காடுகளில் கலந்தாள். இயற்கை தந்தவற்றை முழுவதும் அறிந்தவளாகத் தன்னை வளர்த்துக் கொண்டாள். வாழ்வில் அத்தனையும் இன்பமாகிப் போனது. காட்டில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றின் பயனையும் புரிந்து, அதைத் தனக்கேற்றவாறு பயன்படுத்தும் திறன் கொண்டிருந்தாள்.

அன்று தோழிகளுடன் சேர்ந்து தினைக்காடு காவல் காக்கச் செல்லும் வழக்கம் இருந்தது. அந்த நேரங்களில் அருகில் இருக்கும் அருவிகளில் குளித்து, அங்கிருக்கும் மலர்களைப் பறித்துக் குவித்து விளையாடி மகிழ்ந்தனர். வண்ண வண்ணப் பூக்களை மாலைகளாக்கித் தலையில் வைத்து அழகு பார்த்தனர். பூக்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் அழகு செய்யும் இயல்பு என்றும் மாறாது. தழைகளைப் பறித்து ஆடையாக்கி உடுத்தி மகிழ்வதும் இன்று நினைத்து மட்டுமே பார்க்க முடியும் ஒன்று.|கபிலர் போன்ற புலவர்கள் இப்படிப்பட்ட தகவல்களை எழுதவில்லையெனில் நம் முன்னோர் வாழ்வு மறைக்கப்பட்டிருக்கும் வரலாற்றில்.

தழைகளை உடையாக்கிப் பயன்படுத்திய பண்பாடும், பழக்கமும் இன்று ஆடை வடிவமைப்புத் துறையில் ஈடுபடும் பெண்களின் அழகியல் ஆற்றலின் வழியாக வெளிப்படுகின்றது. பெரும் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கொண்டு  நாகரீகத்தால் வாழ்க்கை மாறியிருக்கின்றது; காலம் வாழ்வை மாற்றியிருக்கின்றது. அதற்கேற்றவாறு மனிதனின் அழகியல் பார்வை புதுமையைப் புதுப்பித்துக் கொள்கின்றது. மனித வாழ்க்கையை அழகாக்குவதும், பொருள்பட வாழச்செய்வதும் இதுபோன்ற சின்னச் சின்ன அழகரும்பும் செயல்களே. குறிஞ்சிப்பாட்டில் அதற்குச் சான்று சொல்லியிருக்கின்றார் கபிலர்.

பாடலின் குறிப்பு

எழுதியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும் 
ஒழுக்கம்- புணர்தலும், புணர்தல் நிமித்தமும் 
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம் 
தெய்வம்- சேயோன் – முருகன் 
துறை – அறத்தொடு நிற்றல் 
பாவகை - ஆசிரியப்பா 
கூற்று- தோழி 
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)

பூவே பூச்சூடவா

வான்கண் கழீஇய அகலறைக் குவைஇப்
புள் ஆர் இயத்த விலங்கு மலைச் சிலம்பின்,
வள் உயிர்த் தெள் விளி இடைஇடைப் பயிற்றி,
கிள்ளை ஓப்பியும், கிளை இதழ் பறியாப்
பை விரி அல்குல் கொய் தழை தைஇப்
பல்வேறு உருவின் வனப்பு அமை கோதை,எம்
மெல் இரு முச்சிக் கவின் பெறக் கட்டி,
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத்
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக, (99-106)

அருஞ்சொற்பொருள்

வான் கண் கழீஇய – மழை பெய்து கழுவிய 
அகல் அறை – அகன்ற பாறையில் அத்தனை மலர்களையும், அறை-பறை, 
குவைஇ – குவித்து 
புள் ஆர் – பறவைகள், ஆர் - நிறைவு, இயத்த – நடத்தல், 
விலங்கு மலை – ஒன்றோடு ஒன்று குறுக்கிட்டு இருக்கும் 
சிலம்பின் – மலையின் பக்கத்தில் 
வள் உயிர் – பெரிய ஓசையினை 
தென் விளி – உடைந்த தெளிவுடைய சொற்கள் 
இடை இடைப் பயிற்றி – இடை இடையே சொல்லி 
கிள்ளை ஒப்பியும் – கிளிகளை ஓட்டியும் 
கிளை இதழ் பறியா – வெளிப்புற இதழ்களைக் களைந்து 
பை விரி அல்குல் – பாம்பின் படம் போன்று விரிந்த அல்குல் 
கொய் தழை – பறித்து எடுத்த தழைகள் 
தைஇ – அணிந்து கொண்டு 
பல்வேறு உருவின் – பல்வேறு உருவங்களில் 
வனப்பு அமை கோதை -அழகாக மலர்களைக் கொண்டு அமைந்த மாலை 
எம் மெல் – என்னுடைய மென்மையான 
இரு முச்சி – கருமையான உச்சிக் கொண்டையில், முச்சி – உச்சி, 
கவின் பெறக் கட்டி- அழகாகக் கட்டி 
எரி அவிர் உருவின் – நெருப்புப் போன்று தோன்றும் நிறத்தையுடைய, எரி - நெருப்பு 
அம் குழை – அழகிய தளிர் 
செயலை - அசோகமரம் 
தாது படு - மலரின் தாது விழுகின்ற 
தண் நிழல் – குளுமையான நிழலில்
இருந்தனம் ஆக – இருந்தோம்.

பாடலின் பொருள்

மழை பெய்து அகலமான பாறையைத் தூய்மையாக்கியது. அந்தப் பாறையில் பறித்த மலர்களைக் குவித்து வைத்தனர். பலவிதமான பறவைகள் எழுப்பும் ஓசைகள் இசைக்கருவிகள் போன்று ஒலிக்கும், ஒன்றோடு ஒன்று குறுக்கிட்டுக் கிடக்கும் மலைச்சரிவில், இடையிடையே தெளிவான சொற்களைச் சத்தமாகப் பேசிக் கொண்டு கிளிகளை விரட்டினோம்.

பூக்களின் வெளிப்புற இதழ்களை எடுத்து நீக்கி, பறித்துக் கொண்டு வந்த தழைகளைப் பாம்பின் படம் போன்று உள்ள அகன்ற அல்குலுக்கு ஆடையாக உடுத்திக் கொண்டோம். பலவித நிறங்களில் உள்ள மலர்களைச் சேர்த்துத் தொடுத்த மாலைகளைத் தலையின் உச்சியில் உள்ள மெல்லிய கரிய முடியில் அழகாகச் கட்டிக் கொண்டு, அழகிய தளிர்களோடு, நெருப்பின் நிறமுடைய அழகிய மலரின் தாது விழுகின்ற அசோகமரத்தின் குளுமையான நிழலில் இருந்தோம்.

எளிய வரிகளில்

அகன்ற பாறை தூய்மையானது
அன்று பெய்த மழையில்.
பூக்கள் அத்தனையும் பாறைமேல் 
குவித்து வைத்தனர்.
பறவைகள் எழுப்பும் ஓசைகள் 
இசையாக ஒலித்தது. 

ஒன்றுடன் ஒன்றெனக் குறுக்கிட்ட
மலைச்சரிவில் தெளிவான 
சொற்களைச் சத்தமாகப் 
பேசியபடிக் கிளிகளை 
விரட்டி நின்றோம்.

பூவில் வெளிப்புற இதழ்களை 
நீக்கி எடுத்தோம், 
பறித்துக் கொண்ட தழைகள் 
அல்குலுக்கு ஆடையாக்கினர். 
வண்ண வண்ண மலர்களைத் 
தொடுத்த மாலைகளைத் 
தலை உச்சியில் மெல்லிய 
கரிய முடியில்  சூட்டினர். 
அழகிய தளிர்களுடன் நெருப்பின்
நிறமொத்த அழகிய மலர்களின்
தாது விழுகின்ற அசோகமரத்தின் 
குளுமையான நிழலில் இருந்தோம்.

சங்ககாலப் பெண்கள் வாழ்வோடு பொருத்திச் செய்த செயல்கள் இன்று பல்வேறு சூழ்நிலையில், வேறுபட்ட வடிவங்களில் பெயர்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. காலங்கள் கடந்தும், பல தலைமுறைகள் தாண்டியும் அதிகமாகவே கொண்டாடப்படுகின்றது பூக்கள். பூக்கள் இன்றி விழாக்களும், நிகழ்ச்சிகளும் இல்லை. காலத்திற்கேற்ற வகையில் பூக்களின் பயன்பாடும், தேவையும் மாற்றங்களோடு மாறாது இருக்கின்றது. ஒவ்வொரு பூக்களும் தனித்தனிச் சிறப்பைக் கொண்டு, தன் கதை சொல்லி வாழும் மணமுடன் என்றும்.

தமிழ் இனம் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே சொல்லிச் சென்ற எண்ணற்ற புலவர்களின் பாடல்களைத் தொகுத்து, எதிர்காலத் தலைமுறையினர் படித்துப் பயனுற வழிவகுத்த அத்தனை தமிழறிஞர்களும் தமிழ்த்தாயின் பிள்ளைகள். அவர்கள் விட்டுச் சென்ற வேறு எந்த மொழியிலும் இல்லாத சிறப்புக்களைக் கொண்ட இத்தகைய படைப்புகளை எட்டுத்திக்கும் பரவிடவும், அவை காலங்கள் தாண்டி வாழ்ந்திடவும் செய்தல் வேண்டும் காதலைச் சொல்லும் பாடல்களில் இயற்கையை, மலையை, மழையை, பாறையை, பூக்களை, பூமாலையை எனக் கபிலர் சொல்லிய செய்திகள் அத்தனையும் தமிழனின் வரலாறு. அவ்வகையில் தமிழன் காதலுக்குச் சொன்ன இலக்கணத்தைக் கொண்டு காதலைக் கொண்டாடக் குறிஞ்சிப்பாட்டுத் தந்த கபிலரின் தமிழ்க்காதல் போற்றப்படும் காதலர்களின் காதல் உள்ளங்களில்.

தனக்குக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு உணவு சமைத்துப் பரிமாறும் திறனும், புத்திக் கூர்மையும் கொண்ட பெண்களைப் பற்றி அறிந்து கொண்ட அதே நேரத்தில், காடு, மலைகளில் சுற்றித் திரியும்போது கிடைத்த பூக்கள், இலைகள், தழைகள் ஆகியவற்றைக் கொண்டு மிக நேர்த்தியான உடைகளையும், மலர்மாலைகளையும் படைக்கத் தெரிந்த பெண் ஆற்றல் நிறை சக்தி. வாழ்வு காக்கும் அவள் யுக்தி.

                                                                                   கதை வளரும் - சித்ரா மகேஷ்

முந்தைய வாரம் : பூக்கள் பூத்த தருணம்

A1TamilNews