ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா
                           
அழகின் அழகு அருவி

 
 இயற்கை பேரதிசயங்களின் ஆசான். இயல்பாக இயற்கையாகத் தோன்றிய ஒவ்வொன்றும் வியக்கத் தக்கவை. மனித ஆற்றலால் ஈடு செய்ய முடியாதவை. காலம் காலமாக மனித இனத்திற்கு வாழ்வாதரங்களைத் தந்து வாழ்விக்கும் பேராற்றல் கொண்டது இயற்கை. சின்னதான புல்லில் தொடங்கி ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைகள் வரை அத்தனையும் உலகிற்கு இயற்கையின் வரம். வானத்தில் கீழ் இருக்கும் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு பயன்பாட்டிற்காகப் படைக்கப்பட்டதே. யாரும் கூட்டம் போட்டு, திட்டமிட்டுச் சிந்தித்து உருவாக்காத இயற்கையில் படைப்புகளும், ஆற்றல்களும் அள்ளக் குறையாத வளங்களைத் தீரா வரங்களாகத் தந்து கொண்டேதான் இருக்கின்றது.

குடிக்கவும், குளிக்கவும் நீர் என்று மாறிப் போன சமூகத்திற்கு அருவியின் அருமையை உணர்த்திட, உணர்ந்திட வாய்ப்புகளைச் சுற்றுலாத் தளங்கள் உதவுகின்றன. அருவியின் அருமையை உணர்ந்தவர்கள் இயற்கையில் காதலர்களாக மாறினர். இயற்கை உள்ளம் திருத்தும் வேலையைக் கூடச் செய்கிறதே? என்ற வியக்கும் வேளையில் இயற்கையைக் காத்திடும் வேலையினை மறந்திடக்கூடாது. மனிதநேயம் எவ்வளவு தேவையோ? அதற்கும் மேலாக உலகைப் படைத்து, இயக்கி, இயங்கி வரும் இயற்கையை நேசித்துப் பாதுகாப்பதும் மிக அவசியம்.

இயற்கை அளித்த வளங்களில் மழையின் ஆதரவால் மலையில் தொடங்கி மனதை மயக்க மண்ணுக்கு வரும் வெள்ளை நிறத்திலொரு அதிசயம். உலகத்தின் அத்தனை உயிர்களின் உயிரை நனைக்கும், உயிரில் இனிக்கும்; தண்ணீரின் கூட்டுறவில் வந்துவிழும், விழுந்தாலும் மீண்டும் எழும் அருவி; அருவியெனும் வெந்நிறப் புரவி. அழகின் அழகென ஆர்ப்பரித்து வரும் அருவியில் குளிப்பது மனிதனின் வாழ்நாள் ஆசை.

அன்றைய சங்கப் பெண்கள் விரும்பும் நேரம்வரை அருவியில் நீராடி, கரைகளில் ஓய்வெடுத்து விளையாடி, மீண்டும் மீண்டும் அருவியில் நனைந்து ஓய்ந்து போகும் வரை மகிழ்ந்திருந்தனர். அப்படி நீராடச் சென்ற நேரத்தில் நடந்த, அவர்கள் நடத்திய செயல்களை அழகுற விளக்கிச் சொல்கின்றது குறிஞ்சிப்பாட்டு. அருவியின் அழகு, பெண்கள் எப்படி விளையாடினர், நீர்த்துளிகளுக்குத் தகுந்த உவமை, நீண்ட நேரம் குளித்ததினால் கண்கள் சிவப்பானது எனச் செய்திகளைத் தொகுத்து கபிலர் எழுதிய வரிகள் கொஞ்சம் அவர்கள் காலத்திற்குச் செல்லௌம் ஆசையைத் தூண்டுகின்றது. அதே நேரத்தில் சங்ககாலத்தைக் கண்முன் சொல்கின்றது.

பாடலின் குறிப்பு

எழுதியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும்
ஒழுக்கம்- புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம்
தெய்வம்- சேயோன் – முருகன்
துறை – அறத்தொடு நிற்றல் 
பாவகை - ஆசிரியப்பா 
கூற்று- தோழி 
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)

விருப்பம்போல் பாடி, நீராடி

அண்ணல் நெடுங் கோட்டு இழிதரு தெள் நீர், 
அவிர் துகில் புரையும், அவ் வெள் அருவி, 
தவிர்வு இல் வேட்கையோம் தண்டாது ஆடி, 
பளிங்கு சொரிவு அன்ன பாய் சினை குடவழி, 
நளி படு சிலம்பில், பாயும் பாடி, 
பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம் 
பின் இருங் கூந்தல் பிழிவனம் துவரி, 
உள்ளகம் சிவந்த கண்ணேம், (54-61)

அருஞ்சொற்பொருள்

அண்ணல் – தலைவன், மன்னன் 
நெடுங் கோட்டு – நீண்ட, நெடிய மலையின், (கோட்டு- மலை) 
இழிதரு - விழுகின்ற 
தெள் நீர் – தெளிந்த நீர் 
அவிர் –ஒளி தரும் 
துகில் புரையும் - துணியைப் போல 
அவ் வெள் அருவி – அழகிய வெண்மையான அருவி 
தவிர்வு இல் – நீக்குதல் இல்லாத 
வேட்கையோம் – பற்று, விருப்பம் உடையவராய் 
தண்டாது ஆடி – அமையாமல் விளையாடி (ஆடி- விளையாடுதல்) 
பளிங்கு சொரிவு அன்ன- பளிங்கினைக் கரைத்துக் கொட்டியது போல 
பாய் சுனை – அகன்ற சுனை, பெரிய சுனையில் 
குடைவுழி – குதித்து விளையாடும் 
நளி படு சிலம்பில்- அடர்ந்த மலையில் 
பாயம் பாடி – விருப்பத்திற்கு ஏற்றபடிப் பாடி 
பொன் எறி மணியின் – தங்கத்தில் பதிக்கப்பட்ட மணியைப் போல 
சிறு புறம் தாழ்ந்த – சிறிய முதுகில் கீழ் இறங்கிக் கிடக்கும் 
எம் பின் இருங் கூந்தல் – எங்களுடைய பின்னியிருக்கும் கூந்தல் 
பிழிவனம் – பிழிந்தோம் 
துவரி – ஈரத்தினை உலர்த்தி 
உள்ளகம் – உட்பகுதி 
சிவந்த கண்ணேம் – சிவந்த கண்களை உடையவர்களாக ஆனோம்.

பாடலின் பொருள்

தலைவனின் பெரிய மலையிலிருந்து விழுகின்ற தெளிந்த நீர் ஒளிதரக்கூடிய வெண்மையான துணியைப் போன்ற அருவியில் இருந்து நீங்கிச் சென்றிட விருப்பம் இல்லாதவர்களாய் விளையாடி, பளிங்கினைக் கரைத்துக் கொட்டியது போன்ற அகன்ற சுனையில் குதித்து விளையாடும் இடத்தில், அடர்ந்திருக்கும் மலையில் விருப்பத்திற்கு ஏற்றதுபோல் பாடி, தங்கத்தில் பதிக்கப்பட்ட நீலமணியைப்போல, சிறிய முதுகில் தாழ்ந்து கீழே இறங்கிக் கிடந்த எங்கள் பின்னப்பட்ட கூந்தலைப் பிழிந்து ஈரத்தினை உலர்த்தினோம். நீண்ட நேரம் விடாது குளித்து விளையாடியதால் சிவப்பு நிறமாகிய கண்களை உடையவர்கள் ஆனோம்.

எளிய வரிகள்

பெரிய மலைதனில் இருந்து வீழும் 
வெள்ளைத் துணி ஒத்த அருவியை 
விட்டுச் செல்ல மனமின்றி விளையாடி,

அடர்ந்த மலையின் நடுவில்  
கரைத்துக் கொட்டிய பளிங்காய்த் 
தோன்றி மயக்கும் சுனையில் குதித்து,
விருப்பம் போலப் பாடி ஆடினோம்.

தங்கத்தில் பதித்த நீலமணி போல 
முதுகினில் கிடந்த பின்னப்பட்ட 
கூந்தல் பிழிந்து உலர்த்தினோம்.

நீண்ட நேரம் அருவி நீரில் விளையாடி 
மீண்டும் மீண்டும் விளையாடியதால் 
சிவப்பு நிறக் கண்கள் கொண்டோம்.

சோர்வு தராத, அப்படித் தந்தாலும் மீண்டும் மீண்டும் அருவியில் நீராடுதல் தனிச்சுகம். அருவியில் நீராடினால் உடலோடு உள்ளமும் தூய்மையாவதை உணரமுடியும். இன்றிருக்கும் குளியலறைகள் வசதிகள் அன்றில்லை. ஆனால் நவீனக் குளியலறைகள் தராத ஒரு பெருமகிழ்வை அருவிகள் போன்ற இயற்கை நீர்நிலைகளில் குளிக்கும் போது பெற முடியும். அருவிகளுக்கென்றே பெயர்பெற்ற ஊர்களும், சுற்றுலாத்தளங்களும் மக்களை ஈர்க்கும் இடங்கள். கோடைக்காலங்களில் அருவிகள் உள்ள இடங்களுக்கு மக்கள் கூட்டம் படையெடுக்கும். அருவி என்ற மூன்றெழுத்து மனிதனைச் சொக்க வைக்கும் என்றும்.

ஆதி மனிதனின் குளியலறையாக இருந்த அருவியில் நீராடும் வாய்ப்பிற்காக ஏங்கித் தவிப்போரும் உண்டு. சுகம் சுகம் அருவியில் குளிப்பது தனிச்சுகம் என்று மந்திரமாய் ஒலிக்கும் குரல்கள் நாள்தோறும் அருவிக்கரைகளில். குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா? என்று பாட்டு ஒலித்துக் கொண்டெ இருக்கும் உள்ளக்கரைகளில்.

கோடி அருவி கொட்டுதே அடி எம்மேல –அது
தேடி உசுர ஒட்டுதே

எனும் வரிகள் அருவியைக் காதலிக்கும் காதலர்களின் பாட்டாகவும் மாறிபோகும் அருவியில் குளிக்கும் போது. 
கண்கள் மூடிக் கண்ட கனவாகவும், பல ஜென்மம் தாண்டி நம்மோடு பயணம் செய்கின்ற ஒன்றுதான் அருவியும் காதல் போல.

                                                                                                    கதை வளரும் - சித்ரா மகேஷ்

முந்தைய வாரம் : முருகனின் சீற்றம்

A1TamilNews