ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா?
தூது சொல்ல வந்தேன்
தமிழனின் அன்றைய வாழ்வின் கட்டமைப்பைக் கால வரிசைப்படிச் சொல்பவை இலக்கியங்கள். மனிதனின் வாழ்வு அரசியல் தொடங்கி தனிமனித வாழ்வு வரை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு இயங்கி வருகின்றது. காதல் கதையைச் சொல்லும் பாடல்களில் கூட இயற்கை, அரசு, அரசியல் செயல்பாடுகள், நாட்டு வளம் எனப் பல்வேறு குறிப்புகள் கிடைக்கப் பெறும் சிறப்புடையது தமிழ் இலக்கியங்கள். ஒருவரியில் வரலாற்றைச் சொல்லும், வாழ்வை எழுதக்கூடிய தேர்ந்த திறனும், ஆழ்ந்த மொழிப் புலமையும் கொண்டிருந்தனர் புலவர்கள். அதுபோலவே நாட்டில் நடக்கும் செய்திகளைத் தகுந்த இடத்தைப் பயன்டுத்தித் தங்கள் படைப்புகளில் பதிவும் செய்தனர். அன்றைய காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் இன்றும் வேறு பெயர்களில் அல்லது வேறு பயன்பாட்டில் வழக்கத்தில் இருப்பதை இலக்கியம் படிக்கும் அனைவரும் வியந்து போற்றுவதோடு, நம் முன்னோர் பின்பற்றிய முறைகள் இன்றும் பயன்பாட்டில் இருப்பது வாழும் மண்ணின் வரலாற்றைச் சொல்லும் ஒன்றாகும்.
இன்றும் அகழாய்வு செய்ததில் கிடைத்த சான்றுகளை வைத்து பண்டைய வாழ்க்கை முறை தொடங்கி வாழ்வாதாரம் பற்றிய பல செய்திகளைக் கண்கூட அறிய முடிகின்றது. சங்க இலக்கியம் நமக்கு முன்னர் வாழ்ந்தோரின் வாழ்வுமுறை, அரசு, வீரம், போர், காதல், திருமணம், தொழில், உணவு போன்றவை பற்றிய பல சான்றுகளைத் தந்து தமிழின வரலாற்றின் உண்மை சொல்லும் இலக்கியப் படைப்பாக விளங்குகின்றது. அதன் வழியே, தூது எனப்படும் செயலும் சங்க காலம் முதலாகப் பயன்படுத்தப்பட்ட செயல்முறை ஆகும்.
காதலர்கள், நாட்டுத் தலைவர்கள், நிறுவனங்கள், தொழில்கள் எனப் பல துறைகளில் தூது செல்வது இன்றும் நடந்து கொண்டிருப்பதே. இது போன்று தூது குறித்த செய்திகளைத் தொகுத்து தூது இலக்கியம் என்ற சிற்றிலக்கிய வகை தோன்றியது. தூது இலக்கிய வகைகள் குறித்து இலக்கணமும் எழுதப்பட்டது. அம்முறையில் முதலில் எழுதப்பட்ட நூல் “நெஞ்சுவிடு தூது”. அரசுகளுக்கிடையே தூது செல்பவன் ஒற்றன் என்று அழைக்கப்பட்டான். உலகப் பொதுமறை திருக்குறளிலும் தூது எனும் தலைப்பில் தனி அதிகாரம் எழுதப்பட்டுள்ளது. ஒற்றனின் இயல்பு, சொல்வன்மை, திறமை, உறுதித்தன்மை என்பவற்றைக் குறள்களின்வழி அறிந்திடலாம்.
இரண்டு பெரிய அரசுகளை ஆட்சி செய்யும் அரசர்களின் பகையை மாற்றி, போரை நிறுத்தத் தூது செல்பவன் மனநிலை பெரும் பதட்ட்டத்துடன் இருப்பதில் வியப்பில்லை. பெரும்கோபத்தோடு போருக்குத் தயாராகி நிற்கும் அரசர்களிடம் சென்று சமாதானம் பேசுவது எளிதான செயல் அல்ல. அப்படிச் செல்வது என்ன விளைவினை ஏற்படுத்தும் என்ற கேள்வியோடும், அச்சத்தோடும் தூது செல்பவனின் மனநிலை இருக்கும். அதே சூழ்நிலையில் இருப்பதாகச் சொல்லித் தோழி அறத்தொடு நிற்கும் பாடல்.
அறத்தொடு நிற்றல்
“அறத்தொடு நிற்கும் காலத் தன்றி
அறத்தியல் மரபிலள் தோழி என்ப” (தொல்-பொருள்-204)
அறத்தொடு நிற்றல் என்பது யாருக்கும் தெரியாது காதல் கொண்ட தோழியின் காதலை பெற்றோர்களுக்கு உரிய முறையில் எடுத்துச் சொல்வது ஆகும். இதன்வழி திருமணம் நடைபெற்று களவு வாழ்க்கையிருந்து கற்பு வாழ்க்கையில் இன்பம் பெறச் செய்வதே அறத்தொடு நிற்றலின் பயன். காதலி தன் தோழியிடம் காதல் கொண்டதைச் சொல்லும் நேரத்தில், தோழி தாயிடம் அறத்தொடு நிற்பாள் என்பது தொல்காப்பியம் சொல்லும் இலக்கணம். அவ்விலக்கணத்தில் இயல்பு மாறாது சூழல் அமைத்து, அரசர்களுக்கிடையில் தூது செல்லும் பழக்கம் இருந்ததைச் சொல்லும் குறிப்பைத் தோழி சொல்வதாகக் கபிலர் குறிப்பிடுகின்றார்.
பாடலின் குறிப்பு
எழுதியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி – மலையும், மலை சார்ந்த இடங்களும்
ஒழுக்கம்- புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
பொழுது – கூதிர் (குளிர்காலம்), முன்பனிக்காலம்
தெய்வம்- சேயோன் – முருகன்
துறை – அறத்தொடு நிற்றல்
பாவகை - ஆசிரியப்பா
கூற்று- தோழி
கேட்போர் –செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்)
காதல் நோய்
இகல் மீக் கடவும் இருபெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல
இருபேர் அச்சமொடு யானும் ஆற்றலென். (27-29)
அருஞ்சொற்பொருள்
இகல் - பகை
மீ – மிகுதியால்
கடவும் – படை செலுத்தும்
இருபெரு வேந்தர் – இரு பெரிய அரசர்கள்
வினையிடை – இணைக்கும் பணியில் இடையில்
நின்ற - நிற்கின்ற
சான்றோர் போல – பெரியோர்கள் போல
இருபேர் – இருவருக்கும் (காதலிக்கும், செவிலித் தாய்க்கும்)
அச்சமொடு - பயத்துடன்
யானும் ஆற்றலென் – நானும் வருந்துகின்றேன்
பாடலின் பொருள்
இரண்டு பெரிய அரசர்கள் பகை கொண்டு போர் செய்யும் நேரத்தில் அவர்களுக்கு இடையில் நின்று ஒற்றுமையை ஏற்படுத்தும் வேலையில் இருக்கும் சான்றோர்கள் போல, உனக்கும் என் தோழியின் காதலுக்கும் இடையில் நான் பயத்துடன் வருந்தி நிற்கின்றேன்.
எளிய வரிகள்
இரு அரசர்கள் பகை கொண்டு
போர் செய்யத் துணிந்தனர்,
அந்த முடிவினை மாற்றிப்
பகை நீக்கத் தூது செல்வர்
சான்றோர்கள்,
அது போல நான் இன்று
உனக்கும் என் தோழிக்கும்
இடையில் வருந்தி பயத்துடன்
நிற்கின்றேன் அம்மா.
காதல் கொண்ட தன் தோழியின் காதலைச் செவிலித் தாயிடம் சொல்ல வேண்டும். சொன்னால் என்ன நடக்கும்? என்ற பயத்தோடும், வருத்தமோடும் அம்மாவிற்கும், காதலுற்ற தோழிக்கும் இடையில் நின்று தவிப்பதாகச் சொல்லும் வரிகள்.
“தூது செல்வதாரடி… உருகிடும்போது செய்வதென்னடி” எனப் பாடிக் காதலால் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் தோழிக்கு உதவிடத் துணிந்து நிற்பவளின் சூழலுக்கேற்ற உவமையாக, அரசர்களின் போர் செய்யும் முடிவை மாற்றிடத் தூது செல்பவனின் நிலையோடு பொருத்திக் கபிலர் எழுதியுள்ளார்.
தூது செல்வது அவ்வளவு எளிது அல்ல. திறன் மிகுந்த இச்செயலைச் சிறந்த ஆற்றலும், நுண்ணறிவும் உள்ளவரே செய்ய முடியும். போரை நிறுத்தவும், காதல் போரில் வெல்லவும் தூது செல்பவர் துணையே துணை அன்றும், இன்றும், என்றும்.
அரசுகளுக்கு இடையில் மட்டுமல்ல காதலர்களுக்காகவும் துணிந்து தூது செல்வதாரடி? தூது சொல்வதாரடி?
கதை வளரும் - சித்ரா மகேஷ்
முந்தைய வாரம் : மறுபடி பொறந்து வந்து
A1TamilNews