வருகிற 14 முதல் 18-ம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை - தமிழ்நாடு அரசு

 

தமிழ்நாட்டில் வருகிற 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு 12 ஆயிரம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால், பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்தது.  இதனை முன்னிட்டு, இன்று (திங்கட்கிழமை) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா பரவலும் உயர்ந்து வந்ததால், கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் பற்றிய புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டில் வருகிற 14 முதல் 18-ந் தேதி வரை வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதனால், கோவில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகளில் பக்தர்கள் நேரில் சென்று வழிபட அனுமதியில்லை.

இதேபோன்று வருகிற 16-ந் தேதி முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். வருகிற ஜனவரி 31-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளன.

பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீத பயணிகள் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்படும்.

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோர் நலனை முன்னிட்டு பொது பேருந்துகளில் 75 சதவீத பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். பொங்கல், தைப்பூசம் ஆகிய நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.