ருத்ரதாண்டவம் படத்திற்கு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

 

மதத்தை இழிவுபடுத்தும் திரைப்படங்களை வெளியிடுவதை அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் லியோன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ருத்ரதாண்டவம் திரைப்படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் அண்மையில் வழக்க தொடரப்பட்டது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் திரைப்படத்தில் வசனம், காட்சிகள் இடம்பெற்றுள்ளது என மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டது. முழு படத்தையும் பார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் படத்திற்கு தடை கோரி வழக்கு போட்டிருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் லியோன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ருத்ரதாண்டவம் படமானது கிறிஸ்துவ மக்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மக்களுக்கு ஜெபம் என்பது புனிதமானது. ஆனால் இயக்குநர்கள் மத கலவரத்தையும், பிரச்சினையும் உருவாக்குவது போன்ற திரைப்படங்களை உருவாக்குகிறார்கள்.

திரைப்படங்களில் கிறிஸ்துவ மக்கள் குறித்து இழிவாக பேசப்படுகிறது. கிறிஸ்தவ மக்களுக்கு பெரிய கஷ்டங்களை தருகிறது. மேலும் மதத்தை இழிவுபடுத்தும் திரைப்படங்களை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் ருத்ர தாண்டவம் திரைப்படம் குறித்து புகார் அளிக்கப்போகிறோம். வேண்டும் என்றால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தயராக உள்ளோம். இனி வரும் நாட்களில் சமுதாயத்திற்கும், வாலிபர்களுக்கும் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் உள்ளிட்ட நோக்கங்களை கொண்ட படங்களை எடுக்க வேண்டும்.

ருத்ர தாண்டவம் போன்ற மத கலவரத்தை தூண்டும் திரைப்படங்களை பார்ப்பதால் அமைதி பூங்காவாக விளங்கும் தமிழ்நாட்டில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகமாகும் ஏற்படுகிறது.

மதம் சார்ந்த பிரச்சனை என்றால் உடனே எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட அரசியல்வாதிகள் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள் ஆனால் தேவையான செய்திகளை மட்டுமே பேச வேண்டும். எந்த மதத்தையும் புண்படுத்தும் விதமாக படங்களை எடுக்க மாட்டோம் என திரைத்துறையினர் உறுதியளிக்க வேண்டும் . ருத்ரதாண்டவம் படத்திற்கு என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கிறேன்” எனக் கூறினர்.