கொடூரமாகக் கொல்லப்பட்ட தம்பதி; வண்டலூர் அருகே கொடூரம்!

 

வண்டலூர் அருகே தம்பதியைக் கொலை செய்து தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வண்டலூர் கொளப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற குடிநீர் வாரிய ஊழியர் சாம்சன் தினகரனும் அவரது 2-வது மனைவி ஜெனட்டும் தனியே வசித்து வந்துள்ளனர். சாம்சன் தினகரனின் முதல் மனைவி ஆலிஸ், மகன் இம்மானுவேல், மகள் பெனிட்டா ஆகியோர் கூடுவாஞ்சேரியில் தனியாக வசிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகள் பெண்ட் தந்தையை தொலைப்பேசியில் அழைத்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. மீண்டும் பல முறை முயற்சி செய்தும் சாம்சன் தினகரன் தொலைப்பேசியை எடுக்காததால், பக்கத்து வீட்டாருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் பெண்ட்டிடம் வீட்டின் கதவு திறந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த மகளும், அவரது முதல் மனைவியும் கொளப்பாக்கம் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாதை அடுத்து முதல் மனைவி, மகள் ஆகியோர் வண்டலூர் அடுத்த ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்,

இதையடுத்து போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டை சோதனை செய்தபோது, ரத்தவாடை வந்த நிலையில் மஞ்சள் பொடி தரையில் தூவப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலிசார் வீட்டிலிருந்த குடிநீர்த் தொட்டியைப் திறந்து பார்த்தபோது, சாம்சன் தினகரன் மற்றும் ஜெனட்டின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இருவர் சடலங்களை மீட்டு போலிசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிசார் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், கொலை செய்யப்பட்ட தம்பதிகளில், ஒரு செல்போன் வீட்டிலும் மற்றொன்று கொடுங்குன்றம் பகுதியில் கிடந்துள்ளது. சொத்துக்காகக் கொலை நடந்ததா அல்லது வேறு காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.