பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ஆளுநர் ஆர்.என். ரவி!

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் கடந்த 10-ம் தேதி முதல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அப்போது, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.