அதிமுக முன்னாள் அமைச்சர் உறவினர்கள் ஆக்கிரமித்த கோவில் நிலம்...  இடித்து அகற்றிய அதிகாரிகள்!!

 

சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் உறவினர்களால் கட்டப்பட்ட கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

சிவகங்கை காமராஜர் காலனி அருகே பழமை வாய்ந்த கெளரி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள சுமார் 11 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.

இந்த நிலையில் கோவில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக சிவகங்கை நகர திமுக நிர்வாகி ஒருவர் காவல்துறையினருக்கும், முதல்வர் தனிபிரிவுக்கும் புகார் மனு அளித்தார்.

இதையடுத்து ஜூன் 19-ம் தேதி அறநிலையத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, அங்கு கட்டப்பட்டு வந்த வணிக வளாகக் கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். அதைத் தொடர்ந்து கட்டிடத்தை ஜூன் 30-ம் தேதிக்குள் இடித்து அகற்ற வேண்டுமென அறநிலையத் துறை சார்பில் ஜூன் 23-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனிடையே, கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கோயில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

மேலும் கட்டடத்தை கட்டியவரே அதனை இடித்து, இடிபாடுகளை அவ்விடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியது. ஒருவேளை அவ்வாறு செய்யவில்லை என்றால் இந்துசமய அறநிலையத்துறையினர் கட்டிடத்தை இடித்து அதற்கான செலவை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நோட்டீஸுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறையினர் ஆக்கிரமிப்பு கட்டத்தை இடித்தனர். வருவாய் கோட்டாச்சியர் முத்துக்கழுவன், சிவகங்கை மாவட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி ஆகியோர் தலைமையில் பொக்லைன் உதவியுடன் கட்டடிம் இடித்து அகற்றப்பட்டது.