அசத்தலான தேர்வு!  இது நடந்தால் தமிழ்நாடு நிச்சயம் ஐரோப்பா போல் வளர்ச்சி அடையும்!!

 

புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர்கள் என்ற பெயரில் சமூகத்தளங்களில் ஒரு பட்டியல் பரவி வருகிறது. மக்களின் நாடித்துடிப்பை தெரிந்து கொள்வதற்காக சுழற்சியில் விடப்பட்டுள்ளதோ என்று கூட தோன்றுகிறது. அந்தப் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினின் பெயர் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று இருப்பதால் இப்படி ஒரு எண்ணம் ஏற்படுகிறது.

வரும் வெள்ளிக்கிழமைக்குள் அமைச்சரவைப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிடும். அதே வேளையில் தற்போது சமூகத்தளங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் பட்டியலில் சில ஆச்சரியங்கள் மூழ்கிக் கிடக்கின்றது. இளைய தலைமுறையினருக்கு வழிவிடுவது போல் உதயநிதி ஸ்டாலின், மருத்துவர் எழிலன், டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வெற்றி அன்பழகன் என ஐவர் அணி ஒன்று புதிதாகத் தோன்றியிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது

இவர்களுக்கு உறுதுணையாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. கருணாநிதி, அன்பழகன், நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் போன்ற அரசியல் வித்தகர்கள் வகித்த நிதித்துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பதவியேற்க உள்ளதாக அந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது. நிதி, திட்டம், கலால், மாவட்ட வருவாய் ஆதாரம் உள்ளிட்ட நிதித்துறைக்கு இவர் மிகவும் பொறுத்தமானவர் ஆவார்.

அமெரிக்காவில் ஐபிஎம் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களிலும், சிங்கப்பூர் நிறுவனங்களிலும் மிகப்பெரிய பொறுப்புகள் வகித்து நிறுவனங்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர் பழனிவேல் தியாகராஜன். கருணாநிதியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த தந்தை பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் திடீர் மறைவால் தமிழ்நாடு திரும்பியவர், தொடர்ந்து மதுரை மத்தி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

அமெரிக்காவில் மேல்படிப்பு, முனைவர் பட்டம் என நன்கு கற்றறிந்த, உலகப் பெரும் நிறுவனங்களுக்கு மூத்த ஆலோசகராக இருந்த ஒருவர் தமிழ்நாட்டின் நிதியமைச்சராக வருவது, ஆச்சரியப்படக்கூடியது மட்டுமல்ல, மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ்நாட்டில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடான வளர்ச்சியை உருவாக்க திமுக அமைச்சரவையில் உள்ள இளைஞர் பட்டாளம் உறுதுணையாக இருக்கும் என்று நம்பலாம்.

கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.