மும்பை தாராவி போல் நடவடிக்கை எடுக்க மே மாதமே சொன்னேன்! ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திரும்பத் திரும்ப ஆலோசனைகள் சொல்லிய போதும், அவர் அதை கேட்கவில்லை. இப்போது நான் ஆலோசனை சொல்லவில்லை என்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ”நான் திரும்பத் திரும்பச் சொன்னது, ஊரடங்கை அமல்படுத்துவதாக இருந்தால் முறையாக அமல்படுத்துங்கள் என்று சொல்லி வந்தேன். தளர்வு, தளர்வுக்கு மேல் தளர்வென்று ஊரடங்குச் சட்டத்தையே கேலிக்கூத்தாக ஆக்கினார்கள்! கோயம்பேடு ஒன்று போதாதா, எடப்பாடி பழனிசாமிக்கு எந்த முன்யோசனையும் இல்லை என்று சொல்வதற்கு? சென்னையில் சில மண்டலங்களில் அதிகமாக நோய்ப் பரவி
 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திரும்பத் திரும்ப ஆலோசனைகள் சொல்லிய போதும், அவர் அதை கேட்கவில்லை. இப்போது நான் ஆலோசனை சொல்லவில்லை என்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

”நான் திரும்பத் திரும்பச் சொன்னது, ஊரடங்கை அமல்படுத்துவதாக இருந்தால் முறையாக அமல்படுத்துங்கள் என்று சொல்லி வந்தேன். தளர்வு, தளர்வுக்கு மேல் தளர்வென்று ஊரடங்குச் சட்டத்தையே கேலிக்கூத்தாக ஆக்கினார்கள்! கோயம்பேடு ஒன்று போதாதா, எடப்பாடி பழனிசாமிக்கு எந்த முன்யோசனையும் இல்லை என்று சொல்வதற்கு?

சென்னையில் சில மண்டலங்களில் அதிகமாக நோய்ப் பரவி வருவதைப் பார்த்து, இந்த மண்டலங்களை மற்ற மண்டலங்களில் இருந்து தனியாகப் பிரித்து அரண் போல அமைத்துத் தடுங்கள் என்று நான் சொன்னேன். அந்த மண்டலத்து மக்கள் வெளியில் வரத் தேவையில்லாத அளவுக்கு, அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுங்கள் என்று சொன்னேன். இதைச் செய்யாததால் தான் இன்றைக்குச் சென்னையின் ஆறு மண்டலங்கள் மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. மக்கள் மிக நெருக்கமாக வாழ்கிறார்கள் என்று மக்களைக் குறை சொன்னார் முதலமைச்சர்.

இதைவிட அதிக நெருக்கமாக மக்கள் வாழ்வது மும்பையில் உள்ள தாராவி. இரண்டரை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 5 இலட்சம் மக்கள் வாழ்ந்த பகுதி அது. 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்குச் சோதனை நடத்தி, தொடர்ந்து பரிசோதனைகள் செய்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் அந்தப் பகுதியையே மாற்றி, இன்றைக்குத் தொற்று குறைந்துவிட்டது. இந்த மாதிரி செய்யுங்கள் என்றுதான் மே மாதமே சொன்னேன். கேட்கவில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் டெண்டர், கமிஷன், கலெக்‌ஷன். அதைத்தவிர வேறு யோசனையே இல்லாமல் இருந்தார்.

கொரோனா வராது என்றார்!

வந்தால் காப்பாற்றிவிடுவோம் என்றார்!

பணக்காரர்களுக்குத்தான் வரும் என்றார்!

யாரும் பயப்பட வேண்டியது இல்லை என்றார்!

மூன்று நாளில் கொரோனா ஒழிந்துவிடும் என்றார்!

இப்போது மூன்று மாதமாக ஒழிக்க முடியவில்லை என்றதும், ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்று அகலமாகக் கையை விரித்துவிட்டார். ஏப்ரல் 16-ம் தேதி, கொரோனா மூன்று நாளில் ஒழிந்து விடும் என்று இவரே எப்படிச் சொன்னார்?

வாய்க்கு வந்தபடி, சவடால் விடுவதுதான் அவரது வழக்கம். எதுவுமே நடக்கவில்லை என்றதும், ‘ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?’ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்,” என்று தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

இனியாவது தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் நின்று கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து செயல்படுவார்களா?

A1TamilNews.com