சென்னையில் தனியார் பொழுபோக்கு பூங்காவிற்கு சீல்! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் பொழுபோக்கு பூங்காவிற்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு 23 ஆயிரம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால், பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்தது.  இதனை முன்னிட்டு, வருகிற ஜனவரி 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
தொடர்ந்து, கொரோனா பரவலும் உயர்ந்து வந்ததால், கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இனி பொதுஇடங்களில் மாஸ்க் அணியவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்திருந்தது. அதேபோல் தனியார் நிறுவனங்கள், கடைகள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பொழுதுபோக்கு இடமான விஜிபி மரைன் கிங்டம்-மிற்கு கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் விஜிபி மரைன் கிங்டம்-மிற்கு விதிகளை மீறியதற்காக ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.