ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது... நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

 

ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது ; கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை இது என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா காலத்தில் தெரு விலங்குகளின் உணவு, குடிநீர் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில்  விசாரணைக்கு வந்தது.

கொரோனா ஊரடங்கில் நேற்று முதல் தளர்வுகள் அமலாகியுள்ள நிலையில், அதுகுறித்து தலைமை நீதிபதி அமர்வு, “இயல்புநிலை திரும்பியது போல வெளியில் காட்சி அளிக்கிறது. இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை” என்று கருத்து தெரிவித்தது.

இதுகுறித்து பதிலளித்த தமிழ்நாடு அரசு கொரோனா முதல் அலை ஊரடங்கில் காவல்துறை மிகவும் கடுமையாக நடந்துகொண்டதால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது கனிவுடன் நடப்பதை மக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டுள்ளனர்  என்று கூறியது.

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வு, ஊரடங்கு காலத்தில்  மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் எனவும், மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்காகவே தளர்வுகள் என்பதை மக்கள் உணரும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.