பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட ‘நெல்’ ஜெயராமன் மரணம்
சென்னை: இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 2 ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நெல் ஜெயரமான், அதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் உதவி செய்தனர். தமிழக அரசும் தாமாக முன்வந்து அவருக்கு மருத்துவ உதவி அளித்தது.
பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். நெல் ஜெயராமன் 174 அரியவகை நெல் வகைகளை சேகரித்ததுடன், மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார்.
அவரது மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நெல் ஜெயராமனின் பூத உடல், சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டது. நெல்ஜெயராமன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க ஸ்டாலின், “நெல்ஜெயராமனின் மறைவு ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு பேரிழப்பாகும். நெல்ஜெயராமனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நெல் திருவிழா நடத்தி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்,” என்று தெரிவித்தார்.
நெல் ஜெயராமன் உடலுக்கு ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
நெல் ஜெயராமனின் இறுதி நிகழ்வுக்கான செலவு மற்றும் அவரது மகனின் படிப்புச் செலவுகளை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
– வணக்கம் இந்தியா