தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர்! உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

 

தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பபட்டதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் அனுமதியுடன் தான் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இது குறித்து அரசை விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின்,

”தமிழகத்தில் உற்பத்தியான ஆக்சிஜனை ஆந்திரா- தெலுங்கானாவுக்கு அனுப்ப மாநில அரசை ஒன்றிய அரசு ஆலோசிக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், 'கலந்தாலோசித்து தான் அனுப்பினோம்' என மத்திய அரசும் மாறிமாறி கை காட்டுவதன் மூலம் இருதரப்பும் தமிழக மக்களை ஏமாற்றுவது உறுதியாகிறது.

மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பின்றி ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு ஆக்சிஜன் அனுப்ப வாய்ப்பில்லை. நம் உரிமைகளை தாரைவார்த்தே பழகிய அடிமை அரசு, ஆக்சிஜன் விஷயத்திலும் முதலாளிகள் எடுத்துக்கொள்ளட்டும் என இருந்துவிட்டு, இப்போது நாடகமாடுகிறது. இதை மக்கள் உணராமல் இல்லை,” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, நீட் விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தை திருப்பி அனுப்பியதை ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழக அரசு மறைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.