பொங்கலுக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திருவான்மியூரில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்ஸ் ஆக்சிஜன் மீட்டர்களை வழங்கினர்.

பின்னர் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 2 ஆயிரம் பேர் கூடுதலாக பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படுபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 15 மண்டலங்களிலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. இதற்காக 178 மருத்துவர்கள், தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னையில் 21,987 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு உதவ 1,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் தனிமைப்படுத்த வசதி இல்லாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இவர்கள் ஆபத்தான நிலையில் இருந்தால் கொரோனா பராமரிப்பு மையம் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.  வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பல்ஸ் ஆக்சிஜன் மீட்டர் வழங்கப்படுகிறது. 3 வேளையும் வெப்ப நிலையை அவர்கள் கண்டறிந்து மருத்துவர்களுக்கு தகவல் தர வேண்டும்.

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் சுமார் 250 நோயாளிகள் உள்ளனர், அவர்களில் எவரும் ஐசியுவில் அல்லது ஆக்ஸிஜன் ஆதரவில் இல்லை.

பெருநகர சென்னை மாநகராட்சியால் அனைத்து நோயாளிகளும் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய கொரோனா தொற்று பரவலால் ஆக்சிஜன் அளவு பாதிப்போ, தீவிர சிகிச்சை அனுமதியோ தேவையில்லை. மருத்துவர்கள் ஆலோசனை மட்டுமே வழங்கப்படுகிறது.

சென்னையில் தினமும் 6 ஆயிரம் பேருக்கு தொற்று பரவுகிறது. 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜீவ்காந்தி, கிண்டி, கொரோனா மருத்துவமனையில் தலா 250 பேர் ஒமைக்ரான் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் யாருக்கும் ஆக்சிஜன் வைக்கக்கூடிய நிலையோ, தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையோ இல்லை.

சென்னை மட்டுமின்றி எல்லா மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. தற்போது ஒமைக்ரான் எஸ்ஜீன் தொற்று அதிகளவு பரவுகிறது.

பரிசோதனை செய்யக்கூடிய 100 பேரில் 85 பேருக்கு ஒமைக்ரான் எஸ்ஜீன் பாதிப்பு உள்ளது. 15 பேருக்கு டெல்டா வைரஸ் உள்ளது.

ஒமைக்ரான் பரிசோதனை முடிவு வருவதற்குள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைந்து விடுகிறார்கள். தற்போது ஒமைக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி 4 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு போடப்படுகிறது. ஜனவரி இறுதியில் இது 10 லட்சமாக உயரும். இதுவரை 20 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

15-18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 90 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு கொண்டு வருவதற்கு அவசியமில்லை. முதல்வர் இந்த வி‌ஷயத்தில் மிக கவனமாக உள்ளார்.

பொருளாதாரம் மட்டுமின்றி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதனால் ஊடரங்கு கட்டுப்பாடுகள் குறித்து தீவிரமாக்க ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கிறார்.

இதனால் சிறிய அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மக்களை காப்பதற்கு முதல்வர் 100 சதவீதம் பாடுபட்டு வருகிறார். பொதுமக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றினால் பொது ஊரடங்கை விரிவுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

பொங்கலுக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் 15-ந்தேதி (சனிக்கிழமை) என்பதால் அந்த வாரம் மெகா தடுப்பூசி முகாமை நடத்தாமல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.

நாளை மாலை 4 மணி முதல் 5 மணி வரை இந்த நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இதில் மத்திய சுகாதார மந்திரி மான்சுக் மாண்டவியா கலந்து கொள்கிறார்.” என்று கூறினார்.