பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து... கிஷோர் கே.சாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

 

சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிஷோர் கே. சாமியின் ஜாமீன் மனு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவின் ஆதரவாளரான கிஷோர் கே.சாமி சமூகவலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவு செய்து பரபரப்பாக பேசப்பட்டவர். திமுக கட்சி மீதும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி இழிவான கருத்துக்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்தார்.

இது தொடர்பாக சங்கர்நகர் போலீசார் கிஷோர் கே.சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பெண் பத்திரிகையாளர் பற்றி ஆபாச கருத்துக்களை வெளியிட்ட புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கிஷோர் கே.சாமியை 2-வது முறையாக கைது செய்தனர். கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிஷோர் கே.சாமி தனக்கு ஜாமீன் கோரி தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கிஷோர் கே.சாமி தரப்பில் வாதாடப்பட்டது.

ஆனால், “கிஷோர் கே.சாமி மீது 2018 முதல் 2021 வரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை அவதூறாக விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் அவதூறாக விமர்சித்திருக்கிறார். மேலும், ஜூன் 26-ம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என அரசு தரப்பில் வாதிடப்பட்டது

ஜாமீன் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சகானா, “மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பரப்பியதால் கிஷோர் கே.சாமிக்கு ஜாமீன் வழங்க முடியாது” எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.