கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி; சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அவற்றில், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்து பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் . உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்ககளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் கடந்த ஒரு மாத காலமாக சேகரிக்கப்பட்டது. மேலும், கூட்டுறவு சங்கம் சார்பாக யாருக்கெல்லாம் கடன் தள்ளுபடி என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என கூறினார்.

 ரூபாய் 6,000 கோடி அளவிற்கான நகை கடன் தள்ளுபடியை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.