உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

 

முதல் தடவையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மிகப்பெரிய வித்தியாசத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் துறை பொறுப்புடன் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் பரவி வருகிறது.

புதிதாக பதவியேற்க உள்ள முதலமைச்சர் மு,க,ஸ்டாலினின் அமைச்சரவை என்ற பெயருடன் சமூகத்தளங்களில் வலம் வரும் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளாட்சி சார்ந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தரும் பொறுப்பும் இந்த துறைக்கு உண்டு. மு.க.ஸ்டாலின் முதன்முதலாக அமைச்சராகப் பதவியேற்றதும் உள்ளாட்சித் துறையில் தான்.

உதயநிதி ஸ்டாலினுடன் வெளியாகியுள்ளப்பட்டியலில் மேலும் பல புதிய இளைஞர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன். சுகாதாரத் துறை அமைச்சராக  பொறுப்பேற்ப்பார் என்று பரவலாகப் பேசப்பட்ட மருத்துவர் எழிலனுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு கணிணி தொழில்நுட்பத் துறையும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையும்,  வெற்றி அன்பழகனுக்கு பதிவுத் துறை மற்றும் வணிகவரித்துறையும் வழங்கப்பட்டிருக்கிறது.