தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தையின் கை கட்டைவிரல் துண்டிப்பு... நர்ஸ் அலட்சியத்தால் விபரீதம்

 

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் நர்ஸ் அலட்சியத்தால் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டை விரல், துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 34). விவசாயக் கூலியான இவருக்கும், பிரியதர்ஷினி (வயது 20), என்ற பெண்ணுக்கும் திருமணமாகி, ஓராண்டு ஆன நிலையில், கருவுற்று இருந்த பிரியதர்ஷினிக்கு கடந்த 25-ம் தேதி, தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குறை மாதத்தில் குழந்தை பிறந்ததால், அதற்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், எனவே தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்ததால், குழந்தைக்கு கையில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இந்நிலையில் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதால், மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து குழந்தையின் கையில் இருந்த ஊசியை நர்ஸ்கள் அகற்றுவதற்கு டாக்டர்கள் உத்தரவிட்டனர். இந்த முயற்சியில் கத்தரிக்கோல் தவறுதலாக பட்டதில், பச்சிளங்குழந்தையின் கட்டை விரல் துண்டாகியுள்ளது. ரத்தம் பெருக்கெடுத்து குழந்தை வீறிட்டு அழுத நிலையில், கை கட்டை விரலுக்கு கட்டுப்போட்டு மீண்டும் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பச்சிளம் பெண் குழந்தையின் கை கட்டைவிரல், செவிலியரின் அலட்சியத்தால் துண்டிக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.