மின்வேலியில் சிக்கி கணவன் - மனைவி பலி..!

 

காட்பாடி அருகே, மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை பிடித்துவரச் சென்ற தம்பதி காட்டுப் பன்றிக்காக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 30). இவருடைய மனைவி லட்சுமி (வயது 26). இந்தத் தம்பதிக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.

இந்நிலையில், மேய்ச்சலுக்குச் சென்ற அவர்களுக்கு சொந்தமான பசு மாட்டை ஓட்டி வருவதற்காக ஜெயபிரகாஷும் லட்சுமியும் விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை வீட்டுக்கு ஓட்டி வந்தனர்.

வழியில், விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக வந்தபோது, அங்கு காட்டுப் பன்றிக்காக அமைத்திருந்த மின்வேலியில் பசு மற்றும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ஆகியோர் சிக்கினர். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அவர்கள் ஓட்டி வந்த பசு மாடும் பலியானது.

விவசாய நிலத்துக்கு சென்ற தம்பதி வீடு திரும்பாததால் அவர்களுடைய குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு, அவர்கள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள், திருவலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த திருவலம் காவல்துறையினர், இருவரின் உடலையும் ஆய்வு செய்தனர். அப்போது, அவர்கள் இருவர் மீதும் மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விளை நிலங்களை பாதுகாக்க காட்டுப் பன்றிக்கு வைத்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில், நில உரிமையாளர் விஜயகுமாரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை பிடித்துவரச் சென்ற தம்பதி காட்டுப் பன்றிக்காக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.