சென்னை, மதுரை, கோயமுத்தூர்... தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான நூலகங்கள்! முதலமைச்சரிடம் கார்த்திகேய சிவசேனாபதி கோரிக்கை!!

 

சென்னையில் கடந்த திமுக ஆட்சியின் போது அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, நவீனமான உலகின் முக்கிய நூலகங்களுக்கு இணையான வசதிகளுடன் மிகப் பிரம்மாண்டமான அண்ணா நூலகத்தைக் கட்டினார். அதன் பிறகு வந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் அண்ணா நூலகம் சீர்குலைந்து போனது. அத்தகைய நூலகங்கள் வேறு எதுவும் தொடங்கப்படவும் இல்லை.

10 ஆண்டுகளுக்குப் பிறகு பொறுப்பேற்ற திமுக ஆட்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணா நூலகத்தை சீர்படுத்தி புதுப்பொலிவுடன் செயல்பட வைத்துள்ளார். அதே போன்ற ஒரு நூலகத்தை மதுரையில் கலைஞர் நூலகம் என்ற பெயரில் தொடங்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை, மதுரையைப் போல் கோயமுத்தூரிலும் பிரம்மாண்டமான நூலகம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்று திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கையை முன் வைத்துள்ளார். இது குறித்து கார்த்திகேய சிவசேனாபதி கூறியுள்ளதாவது,

”கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை பரவிய மிகச் சிக்கலான காலகட்டத்தில் பதவியேற்று இன்று அதையெல்லாம் தன் நிர்வாகத் திறமையால் கட்டுக்குள் கொண்டு வந்து சிறப்பான ஆட்சி புரியும் எங்கள் தலைவர், மாண்புமிகு முதல்வர் அவர்களைச் சென்னையில் சந்தித்தேன்.

மக்கள் துயரறிந்து கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 மற்றும் நிவாரணப் பொருட்கள், பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு அரசுப் பேருந்துகளில் அவர்களின் உள்ளூர் பயணத்திற்குக் கட்டணமில்லா சேவை, மக்கள் அளித்த கோரிக்கைகளின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டம் என எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது நம் கழக அரசு.

அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றதொரு நூலகத்தைக் கோவையிலும் அமைத்திட மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன். சந்திப்பின் போது முதல் முறையாக அச்சு வடிவில் பதியப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் நகலை அன்பளிப்பாக வழங்கினேன்," என்று கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர், கோவையில் அண்ணா, கலைஞர் நூலகம் போல் ஒரு பிரம்மாண்டமான நூலகம் தொடர்பாக முதலமைச்சரிடமிருந்து விரைவில் ஒரு அறிக்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.