இந்தியளவில் ட்ரெண்டிங்கான #GoBackStalin ஹேஷ்டேக்..! திமுகவினர் அதிர்ச்சி!!

 

கொங்கு மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், ட்விட்டரில் இந்திய அளவில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னையை பின்னுக்கு தள்ளி மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது. நாள்தோறும் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை கடக்கிறது. தினசரி 30 பேருக்கு மேல் இறப்பு உள்ளது.

கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

இந்த சூழலில், ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக நண்பகல் நேரத்தில் இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடம் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. சொந்த மாநில மக்களே முதல்வர் திரும்பிச் செல்ல வேண்டும் என்று சமூக வலைதளங்களில் எதிர்ப்பை காட்டுவது தமிழகம் காணாத நிகழ்வாக இருக்கிறது.

இதற்கு போட்டியாக #WeStandWithStalin, #KovaiWelcomesStalin போன்ற ஹேஷ்டேக்குகளை வைரலாக்கி வருகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றினாலும், கொங்கு மண்டலத்தில் படுதோல்வியை சந்தித்தது. அந்த கொங்கு மண்டலத்திற்கு ஆய்விற்காக செல்லும் போது தான், முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படியொரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.