விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள்... ஒன்றிய உள்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையே காரணம்; தமிழ்நாடு அரசு விளக்கம்!

 

வரும் முன் காப்போம் என்ற வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

நாடு முழுவதும் வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு தடை விதிப்பதாக அறிவித்தது.

மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, கோவில்களின் வெளிப்புறத்திலும், சுற்றுப்புறத்திலும் வைத்துவிட்டு செல்லவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில் ஒன்றிய உள்துறை செயலாளர் சுற்றறிக்கையின் பேரிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று சட்டசபையில் பாஜக எம்எல்ஏ காந்தி கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “ஒன்றிய உள்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கை அடிப்படையிலேயே, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வரும் முன் காப்போம் என்ற வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” என்று அவர் விளக்கமளித்தார்.