மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆட்டோ: கரூர் கலெக்டரி்ன் கருணை..!

 

கரூர் கலெக்டர் அலுவலகம் வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை பஸ் ஸ்டாப்பில் இருந்து அழைத்து வந்து, மீண்டும் பஸ் ஸ்டாப் கூட்டிச் செல்ல இலவச ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் வாரத்தின் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதில், அந்தந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு மனு அளிப்பது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மனு அளிப்பதற்காக, கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப்பில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு, கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கைகளை தரையில் ஊன்றி தவழ்ந்த படியே வந்துள்ளார்.

இதைக்கண்ட கலெக்டர் பிரபுசங்கர் கடந்த வாரம் திங்கட்கிழமை, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகளை அழைத்துவர, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நுழைவு வாயிலில் சக்கர நாற்காலியுடன் ஊழியர் ஒருவரை நியமித்தார்.

அத்துடன், கடந்த வாரம் நடந்த காணொளி மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் பிரபுசங்கர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் மாற்றுத் திறனாளிகளை பஸ் ஸ்டாப்பில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரவும், மறுபடியும் அவர்களை பஸ் ஸ்டாப்பில் கொண்டுபோய் விடவும் இலவச ஆட்டோக்களை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று (திங்கட்கிழமை) 2 இலவச ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஆட்டோக்களின் டிரைவர்கள், கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப்பில் இருந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை ஏற்றி வந்து கலெக்டர் அலுவலகத்தில் இறக்கி விட்டனர்.

மேலும், மனு அளித்துவிட்டு திரும்பிய மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்களை கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப், சுங்க வாயில், கரூர் பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் கொண்டு இறக்கிவிட்டனர்.

இதுகுறித்து கரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில் கூறும்போது, “வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் கலெக்டர் அலுவலகம் உள்ளே மற்றும் வெளியே தலா ஒரு ஆட்டோ வீதம் 2 ஆட்டோக்கள் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக அழைத்துச் செல்வதற்கு நிறுத்தப்படும்.

கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப்பில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லவும், அங்கிருந்து கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப், சுங்க வாயில், கரூர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் அவர்களை இறக்கிவிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.