தமிழ்நாட்டில் அக்டோபர் 31-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

 

தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்த மாநிலங்களில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை பல்வேறு கட்டுப்பாடுகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

அதன்படி தமிழ்நாட்டிலும் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வரும் 30-ந் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்த ஊரடங்கை நீட்டிப்பு, கூடுதல் தொடர்புகள் வழங்குவது உள்ளிட்ட முடிவுகளை எடுப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் பகல் 12.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கின் போது ஏற்கனவே விதிக்கப்பட்ட அனைத்து நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு விதிகளும் அமலில் இருக்கும். மேலும் சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.