காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடக்கிறது

 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த 2 நாள்களாக வங்கக் கடலில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவில், புதுவைக்கு வடகிழக்கு திசையில் 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கிறது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரை காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

கடைசியாக மகாபலிபுரம் அருகே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை அருகே கரையை கடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.