மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்குமாம்... சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

 

மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை ஈக்காட்டுதாங்கலில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  கூறியதாவது,

கூட்ட நெரிசலை தவிர்க்க, தீவிர அறிகுறி இருந்தால் மட்டும் முக்கிய 4 அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் அணுகலாம்.

அறிகுறிகள் இன்றி கரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் இருந்தாலோ உங்கள் வார்டு சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

முடியாதவர்கள் கொரோனா கண்காணிப்பு மையங்களுக்குச் செல்லுங்கள். அங்கு உங்களுக்கு அனைத்துவிதமான பரிசோதனையும் எடுக்கப்படும்.

சென்னையில் 4 நாட்கள் முக கவசம் அணிந்தால் கொரோனா பரவல் குறைந்துவிடும்.

கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது.  மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும், முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என கூறினார்.