கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் மீது போக்சோ..

 

பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா மேல் நிலைப்பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு உக்கடம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும், அதில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (வயது 31) உள்பட 3 பேரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டு இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தி மாணவியிடம் வாட்ஸ்அப்பில் ஆபாசமான முறையில் தொல்லை அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் நேற்று மாலை கைது செய்து செய்தனர்.

அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இரவு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிரியரை வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரா ஜாக்சனை பிடிக்க கோவை மாநகர போலீஸ் தரப்பில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.