பரிகாரங்களுக்காகத் தாமிரபரணி ஆற்றில் வீசி எறியப்படும் துணிகள்! டன் கணக்கில் அகற்றிய நகராட்சி அதிகாரிகள்!!

 

இந்தியாவில் ஆறுகள் மாசுபடுவதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து நேர்ந்து வருகிறது. தொழிற்சாலைகளால் ரசாயனக் கழிவுகள் ஒருபுறம் என்றால் பொதுமக்களின் கவனமின்மை மற்றும் மூடப்பழக்கங்களாலும் ஆறுகள் மாசடைந்து வருகிறன்றது.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் தங்கள் பழைய துணிகளை எறிந்து வருவதால் அங்கே பெரும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. விக்கிரமசிங்க புரம் நகராட்சி  ஆணையர் காஞ்சனா தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் நகராட்சி அலுவலர்கள் இந்த துணிகளை அகற்றி குப்பைக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 3 டன் துணிகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. மூட்டைகளாக கட்டப்பட்டு நகராட்சி குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பரிகாரம் என்ற பெயரில் தங்கள் பழைய துணிகளை பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் வீசிச் செல்வதை தடை செய்ய வேண்டும் அல்லது ஆற்றின் ஏதாவது ஒரு பகுதியில் இத்தகையப் பரிகாரங்களுக்காக தனி இடம் அமைத்து, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.