வட தமிழ்நாடு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் - சென்னை வானிலை மையம்

 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூர், மணம்பூண்டி ஆகிய 5 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூரில் தலா 22 செ.மீ. மழையும், மணம்பூண்டியில் 21 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 35-க்கும் அதிகமான இடங்களில் தலா 10 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும். குமரிக்கடல், மன்னார் வளைகுடாவில் மணிக்கு 50 கி.மீ. வரை சூறைக்காற்று வீசக்கூடும்.

வட தமிழ்நாட்டில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களுக்கு மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.  வட தமிழ்நாடு கடலோரம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் .

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தருமபுரி, வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும்,

தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.