கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 

கன்னியாகுமரிக்கு அதி கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை பெய்து முடிந்ததை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தற்போது கடந்த சில தினங்களாகவே மழை கொட்டி வருகிறது.

இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. அதன்பிறகும் அடங்காத மழை இரவிலும் நீடித்தது. இதனால், கன்னியாகுமரி வெள்ளத்தில் மிதக்கிறது.

தற்போது கன்னியாகுமரியில்  விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரிக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,

“கன்னியாகுமரியில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும். நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும். 19 மாவட்டங்களில்  கனமழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.