இனிமேல் மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தால் ஜாமின்; மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

 

போதையில் தகராறு செய்த வழக்கில் இனி மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்தால் ஜாமின் வழங்கப்படும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இரண்டு நபர்கள் மீது, மதுபோதையில் தங்கள் நண்பர்களான சுரேஷ், பாண்டியன் ஆகியோரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவா, கார்த்திக் இருவரும், தங்களுக்கு ஜாமின் வழங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையானது அல்ல என்றும் கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல்துறையினர் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமின் வழங்குமாறு இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் இளைஞர்கள் மது அருந்திவிட்டு விளையாட்டாக செய்யும் காரியங்கள் விபரீதமாக மாறிவிடுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் மனுதாரர்கள் இருவரும் இனிமேல் மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த உறுதிமொழியை பிரமாணப் பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் மட்டுமே மனுதாரர்களுக்கு ஜாமின் வழங்கப்படும் என்றும் தெரிவித்து இந்த வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.