திமுகவில் சேர போறேனா..? குஷ்பூ விளக்கம்!!

 

நடிகை குஷ்பூ மீண்டும் திமுகவில் சேர இருப்பதாக தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் ஒரு வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் அதிமுகவில் சசிகலாவினால் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் காரணமாக ஒரு சில அதிமுக தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிருப்தி காரணமாக ஒருசில அதிமுக தொண்டர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

நடிகை குஷ்பு முதன்முதலாக அரசியலில் இணையும்போது திமுகவில் இணைந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர்கள் இணைந்தபோது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் திடீரென அவர் மு.க.ஸ்டாலினை பகைத்து கொண்டதால் அவரால் திமுகவில் தொடர முடியவில்லை.

இதனை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு ஓரளவு மதிப்பு இருந்தாலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அவருக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்ததாக கூறப்பட்டது. மேலும் அவருக்கு எந்தவிதமான பதவியும் அளிக்கப்படவில்லை. இதனை அடுத்து அதிருப்தி காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.

அந்த வகையில் பாஜகவை சேர்ந்த குஷ்புவும் திமுகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் செய்தியாளரை சந்தித்து பேசிய குஷ்பு, திமுகவில் சேர போகிறேன் என மனசாட்சியை அடகு வைத்து விட்டு சிலர் பொய் பரப்புகின்றனர். கட்சியிலும், ஆட்சியிலும் பதவி எதையும் கேட்கவில்லை. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைவதற்கு முன்பும் இதே போல்தான் குஷ்பு மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.