நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து போட்டி - அன்புமணி ராமதாஸ்

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள், பரப்புரை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, ஊரக உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடும் என்றார்.

மேலும் பாமக தனித்து போட்டியிட்டாலும், தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வருவதாக தெரிவித்தார்.