அரிய வகை நோயால் உயிருக்கு போராடும் 8 மாத பெண் குழந்தை; சிகிச்சைக்கான செலவை ஏற்ற தமிழ்நாடு அரசு!

 

அரிய வகை மரபணு ரத்தம் உறைதல் குறைபாடு ஏற்பட்டு உயிருக்கு போராடும் குழந்தையின் சிகிச்சைக்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கொளஞ்சி - கார்த்திகா தம்பதிக்கு பிறந்த குழந்தை தியாயினி. அந்த குழந்தைக்கு பிறவியிலேயே மரபணு ரத்த உறைதல் குறைபாடு நோய் இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு குழைந்தை தொடர் வாந்தி எடுத்ததால் உடனடியாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. அப்பொழுது மருத்துவர்கள் பரிசோதனை செய்த பொழுது குழந்தைக்கு மரபணு ரத்த உறைதல் குறைபாடு இருப்பதால், தலையில் ரத்த கசிவு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அதன் பின்னர், ரத்தம் உறைவதற்காக அவ்வப்பொழுது ஊசிகள் மூலம் மருத்துகளும் செலுத்தப்படுகிறது.

அதன் பின்னரும் குழந்தைக்கு ரத்த கசிவு ஏற்படுவதுடன், தலையின் பின் பகுதி வீக்கமடைந்து, உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக அதன் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குழந்தையின் தந்தை கண்ணீருடன் தனது குழந்தையை காப்பாற்றி கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனையும் நேரில் சந்தித்து கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அமைச்சர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசியை தொடர்பு கொண்டு, குழந்தைக்கு தேவையான சிகிச்சையை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் வெளி மருத்துவர்களின் உதவி கொண்டும் சிகிச்சையளிக்கவும், அதற்கான செலவை அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளது குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக உள்ளது.

இந்த நோய் மிகவும் அரிதான நோய் எனவும், சிரமமான நோயாக இருப்பதால் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள தயக்கம் இருப்பதாகவும், மேலும் தலை வீக்கமடைந்திருப்பதால் அதற்கும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர். வீக்கம் குறைந்த பிறகு ரத்த கசிவை கட்டுப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்படும் என மருத்துவமனை இயக்குநர் எழிலரசி தகவல் தெரிவித்துள்ளார்.

அழகான பிஞ்சு குழந்தைக்கு அபூர்வ நோய் பாதிப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை மேற்கொண்டு வருவது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.